Thursday, May 29, 2014

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை?
தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை.
பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல் தயாரிப்பதற்கு செயல் முறை வெளியிடப் பட்ட
நிலையில் தொடக்கக்கல்வி துறையில் பதவி உயர்வு சம்மந்தமாக செயல் முறைகள் இது வரை வெளியிடவில்லை .
இத்தகைய சூழ்நிலையில் நேரடி நியமனம் மட்டுமே நடைபெறும் எனவும் பதவியுயர்வு கலந்தாய்வுக்கான அறி குறிகள் மிக மிக குறைவாகவே இருப்பதாக கூறபடுகின்றன .
தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களின் பதவியுயர்வு புறக்கணிக்கபடுவதால் மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Wednesday, May 28, 2014

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்-தினகரன் நாளிதழ்.

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம்
செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.

1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வீடுதோறும் பிரச்சாரம்.அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வீடுதோறும் பிரச்சாரம்.

தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடுதோறும் பிரச்சாரத்தில் ஈடுபட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இதனால் சில ஆண்டுகளாக அரசு துவக்கப் பள்ளிகள் மாணவர்களின் சேர்க்கை விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு, ஆங்கில வழிக்கல்வி மற்றும் விலையில்லா புத்தகம், நோட்டு, புத்தக பை, சீருடை, காலணி ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, மாணவர்களுக்கு கல்வி கற்பித்து தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு துவக்கப்பள்ளகளில் ஆங்கில வழி கல்வி மற்றும் அரசு தரும் விலையில்லா பொருட்கள் குறித்து விவரங்களை பெற்றோர்களுக்கு துவக்க பள்ளி ஆசிரியர்கள் மூலம் கொண்டு சென்று அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை இந்தாண்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. குறிப்பாக நகர் பகுதிகளில் உள்ள பல அரசு துவக்கப் பள்ளிகளில் மிகவும்சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர்.தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி மற்றும் நோட்டீஸ்கள் வழங்கி வந்தோம்.

இந்தாண்டு முதல் தங்கள் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு துவக்கப்பள்ளிகளில் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பிரச்சாரம் செய்து மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மேலும் ஆங்கில வழி கல்வி மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் குறித்து விளம்பர பலகை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.
ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற வரும் ஜூன் 30க்கும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
இதுகுறித்து திருச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 
ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கானபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் விபரங்கள் குறிப்பிடப்பட்ட படிவங்களில் பெறப்பட வேண்டியுள்ளது. இப்படிவங்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், அனைத்து கருவூலங்கள், பொதுத்துறை வங்கிகள் மூலம் ஓய்வூதி யர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப் படும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, புகைப்படம் மற்றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன் தொடர்புடைய ஓய்வூதி யம் வழங்கும் அலுவலகம், கருவூலம், பொதுத்துறை வங்கியில் ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் நேரடியாகவோ அல்லது பிறர் நபர் மூல மாகவோ வரும் ஜூன் 30ம் தேதிக்குள் கொடுக்கப்பட வேண்டும். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்க ளின் நகலெடுத்து, அதனை சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் சான்றொப்பத்துடன் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஓய்வூதிய விபர படி வத்தை, புகைப்படம் மற் றும் துணைவரின் பிறந்த தேதியினை உறுதி செய்யும் ஆவண நகலுடன், ஏற் கெனவே, நேர்காணலின் போது கொடுத்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் மீண் டும் அதே படிவத்தை கொடுக்க தேவை இல்லை. எனினும், அரசு குறிப்பிட்டுள்ள கூடுதல் படிவத்தை( விருப்பப்படிவம்) பூர்த்தி செய்து கொடுக்க வேண் டும்.
நேர்காணலுக்கு இது வரை செல்லாதவர்கள் உரிய படிவங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவல கம் மற்றும் கருவூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லதுஷ்ஷ்ஷ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ ஷீக்ஷீ <ஷ்ஷ்ஷ்.ளீணீக்ஷீuஸ்ஷீஷீறீணீனீ.வீஸீ> என்ற இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை 2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி முதல் தொடர்ந்து மேல் படிப்புகளை மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புகள் வரை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் படிப்புகளாக பதிவுகளைச் செய்து வருவது வழக்கம்.

ஐடிஐ, பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், பொறியியல் பட்டம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஊட்டியில் துவங்கி கன்னியாகுமரி வரை 16 மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாவட்டங்களுக்கு மதுரையில் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.

மேற்படி தொழில் படிப்புகளை இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளையும் இந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பி.எட். முடிக்கும் மாணவ, மாணவியர் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கூடுதல் தகுதியாக அதைப் பதிவு செய்கின்றனர். அதன்பிறகு, இதே மாணவ, மாணவியர் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுநிலைப் பட்டத்தைப் பெற்றவுடன், அந்தப் படிப்பை மட்டும் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதாவது, பி.எட். படிப்பை ஏற்கெனவே, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டதால், பதிவு மூப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என கருதி விடுகின்றனர்.

இதனால், பி.எட். படிப்புடன் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக, வேலைவாய்ப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பலமுறை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமும், தொழில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் இது தொடர்பாக முதுநிலைப் பட்டம் பெறுவோருக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளநிலைப் பட்டத்துடன் பி.எட். பதிவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் பெற்றவுடன் மீண்டும் பி.எட். படிப்பை தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் பரிந்துரையின்போது, தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் என்றார்.
ஆசிரியர்கள் இட மாறுதலுக்கு முன் 'சர்பிளஸ்' விவரம் சேகரிப்பு

தமிழகத்தில், ஆசிரியர்களுக்கு இடமாறுதல், 'கவுன்சிலிங்' நடத்துவதற்கு முன், பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் நடத்தப்படும் பதவி உயர்வு மற்றும் இட மாறுதல் கவுன்சிலிங்குக்கு முன், கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் குறித்து விவரம் சேகரிப்பதால், பணிநிரவல் அடிப்படையில், ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடும் என்ற தவகல் பரவியுள்ளது. பல லட்சம் ரூபாய் கொடுத்து, புதிய இடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்கள், இதனால் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'குடும்பம் ஒரு பக்கம், பணி ஒரு பக்கம் என, பல ஆண்டுகளாக சிரமப்பட்டு, ஓராண்டுக்கு முன் தான், பணிமாறுதல் பெற்றேன். ஆனால், அதற்குள், 'சர்பிளஸ்' கணக்கெடுப்பு நடத்தி, மீண்டும் பணிமாற்றம் செய்ய முயற்சி செய்கின்றனர்' என்றார்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: வரும் ஜூன் மாதத்துக்குள், வழக்கமாக நடத்தப்படும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கு பின், சர்பிளஸ் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிநிரவல் செய்ய கல்வி அதிகாரிகள் முன்வர வேண்டும். இந்த முறையை மாற்றினால், பல ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.எஸ்., திட்டத்தில் சேராதவர்களுக்கு சிக்கல்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (கான்ட்ரிபியூட்டரி பென்ஷன் ஸ்கீம்) கணக்கு எண் பெறாதவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 31-க்கு பிறகு சம்பளம் வழங்க, அரசு தடை விதித்து உள்ளது.

ஏப்., 1, 2003க்கு பின் அரசு பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அரசு ஊழியர்கள் அனைவரும், கணக்கு எண் பெற்று, அவரவர் கணக்கில், ஒவ்வொரு மாத ஊதியத்திலும், 10 சதவீத தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில ஊழியர்களுக்கு, 2014 மே மாத ஊதியத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக, எவ்வித தொகையும் பிடித்தம் செய்யப்படாமல், சம்பள பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு முதன்மை நிதித்துறை செயலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் அனைவருக்கும், ஒவ்வொரு மாத ஊதியத்திலும், ஓய்வூதிய தொகை பிடித்தம் செய்வது கட்டாயம். ஆனால், ஒரு சில அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், கணக்கு எண் பெறாததால், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படவில்லை. வரும் ஆகஸ்ட் 31-க்கு பின், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்குரிய தொகை பிடித்தம் செய்யாமல், சம்பள பட்டியலை வழங்க கூடாது. மீறி வழங்கினால், அவர்களுக்கு அதன் பிறகு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அனைத்து துறைகளிலும், சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள், தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும், கணக்கு எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, கணக்கு எண் பெற அறிவுறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, May 24, 2014

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சங்கத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் கூறியது:

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்வுகள் எழுதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணி நியமனம் பெறுகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு இந்தப் பணியிடம் மாற்றுப்பணியிடமாகவே கருதப்படுகிறது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஒன்றிய அளவில் தொடக்கக் கல்வித் துறையின் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுகிறார். ஆனால், அவருக்கும், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கும் ஒரே ஊதியம் வழங்கப்படுகிறது.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை மாற்றுப் பணியாகக் கருதுவதற்குப் பதிலாக, பதவி உயர்வு பணியிடமாகக் கருத வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தப் பரிந்துரையை ஏற்று உடனடியாக இந்தப் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும். உரிய ஆணை வழங்க மேலும் கால தாமதமானால் நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளோம்.

அதேபோல், ஒன்றிய அளவில் மாதத்துக்கு 25 பள்ளிகளை ஆய்வு செய்யும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பயணப் படி வழங்குவதில் சரியான விதிகள் பின்பற்றப்படுவதில்லை.

அடிப்படை ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பயணப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றார்.

Tuesday, May 20, 2014

ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரம் ரத்தாகுமா? பரபரப்பை ஏற்படுத்திய அரசின் கடிதம்.
அரசுக்கு எதிராக தேர்தல் சமயத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஆசிரிய சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் செயல்படுகின்றன. கடந்த மார்ச் 6ம் தேதி "இடை நிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, பல ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:"ஆசிரியர்களை ஸ்டிரைக் நடத்த அழைப்பு விடுத்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொது செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலதலைவர் அண்ணா மலை ஆகியோர் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர்களாக உள்ளனர். ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிப்படி, அவர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில் இருக்க முடியாது; அவர்களை நன்னடத்தை விதிகள் எதுவும் கட்டுப்படுத்தாது. எனவே, அவர்கள் தலைமையில் செயல்படும் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; அச்சங்கங்களை மாவட்ட, மாநில அளவிலான எவ்விதபேச்சு வார்த்தைக்கும் அழைக்க கூடாது" என, கூறப்பட்டிருந்தது.
இக்கடிதம் தொடர்பாக அரசு துணை செயலர் செல்வராஜ், தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான புகார் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனு மீதான புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு வரும் 15 நாட்களுக்குள் "ஆன்-லைன்" மூலம் தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார்.அரசின் இந்நடவடிக்கை, ஆசிரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.
பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்தமேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
உத்தரவு விவரம்:
தமிழக அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முழு நேர தினசரிக்கூலிகளாக 2006 ஜன.1-க்கு முன்பு 10ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு 2006-ல் உத்தரவிட்டது. இந்த சலுகையை தங்களுக்கும் வழங்குமாறு பகுதி நேர ஊழியர்கள் 50 பேர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுக்கு சாதகமாக தனிநீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.
அரசு உத்தரவு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவுகளை பிறப்பித்தது தவறானது. பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர துப்புறவு ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் கோரிய வழக்கில், கடந்த பிப்.21-ல்உச்சநீதிமன்றம் சட்ட விதியை தெளிவு படுத்தியது. பணி நிரந்தர உரிமை கோரும் ஊழியர்கள் பணிநியமன விதிகளின் படி நியமிக்கப்படவில்லை. காலியாக உள்ள பணிகளில், இவ்வாறு பகுதி நேர ஊழியர்களை நியமிப்பது, அப்பணிகளைச் செய்யும் தகுதியுடையவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். அதே சமயம், பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரம் செய்ய சட்டபூர்வ உரிமை இல்லாததால், இரக்க உணர்வு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியாது. எனவே, பணி நிரந்தரம்கோர பகுதிநேர ஊழியர்களுக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம்குறிóப்பிட்டு உள்ளது. இந்த உத்தரவு வெளியாகும் முன்பு, 2013 ஜூன் 27-ல் தமிழகஅரசு மேலும்ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 2006 ஜன.1- க்கு பிறகு நியமிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பணியாற்றிய முழுநேரஊழியர்களாக இருந்தாலும் பணி நிரந்தரம் பெற தகுதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. எனவே, பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம்செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன எனஉத்தரவில் குறிப்பிடப்பட்டது.இவ்வழக்கில், தனிநீதிபதிகளின் உத்தரவுகள் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களை அரசு தொந்தரவு செய்யாது என்ற அரசு கூடுதல்வழக்குரைஞரின் உறுதிமொழியை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

Friday, May 16, 2014

ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க...தினமலர் டீக்கடை பெஞ்ச்

ரெண்டு அமைச்சர்களும் நழுவியதால, ஆசிரியரெல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' எனக் கூறியபடியே, பெஞ்சில் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.

''அமைச்சருங்க யாரு... ரகசிய துாது எதுக்காமுங்க...'' என, கேட்டார் அந்தோணிசாமி.

''கன்னியாகுமரி மாவட்டத்தில, பிளஸ் 2 தேர்ச்சி குறைஞ்சிடுச்சுன்னு, 'டென்ஷன்' ஆன கல்வி துறை அதிகாரி, இரணியல், பந்தலுமூடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருங்களை சஸ்பெண்ட் செஞ்சுட்டாரு... பளுகல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, திடீர்ன்னு பொறுப்பிலிருந்து விடுவிச்சுட்டாரு... பாடங்கள்ல தேர்ச்சி விகிதம் குறைஞ்சிடுச்சுன்னு, பன்னெண்டு ஆசிரியர்களுக்கு, விளக்க கடுதாசி அனுப்பிட்டாரு... இதனால, ஆசிரியர்களும், 'டென்ஷன்'ல இருக்காங்க...இவங்க, ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் தகவலை சொல்ல, எல்லாருமா சேர்ந்து, உள்ளூர்ல இருந்த அமைச்சர் பச்சைமாலை சந்தித்து குமுறியிருக்காங்க... ஆசிரியருங்க பற்றாக்குறை, படிக்காத மாணவருங்களை கண்டிச்சா ஏற்படும் பிரச்னை, அரசின் வேறு திட்டங்களுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துறதுன்னு, எல்லா பிரச்னைகளும் சொல்லி இருக்காங்க...

''ஆனா, தேர்தல் முடிவு தெரியாத டென்ஷனில் இருந்த அமைச்சர், 'ஏற்கனவே பிரச்னை... இப்ப இது வேறயா... சரி, நான் பாத்துக்கிறேன்'ன்னு சொல்லி, எல்லாரையும் அனுப்பிச்சு வச்சிட்டாரு... ஆனா, இதுவரைக்கும், யாரிடமும் பேசலே...

''ஆசிரியர்கள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிங்க, பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணிக்கு விவரத்தை தெரிவிச்சாங்க... ஆனா, அவரும் வாயே திறக்கலியாம்... ஆசிரியரெல்லாம் நொந்து இருக்காங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.
அங்கீகாரம் ரத்தாகும் பள்ளி விபரம் அறிவிக்க தாமதம் ஏன் : கடைசி நேர பதட்டம் தவிர்க்க பெற்றோர் வலியுறுத்தல்

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகள் பட்டியலை, அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக பெற்றோர், தரப்பில் புகார் எழுந்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி, பள்ளிகள் அங்கீகாரம் குறித்த செயல்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தீவிர முனைப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த கல்வியாண்டில், 900 தனியார் பள்ளிகள் அதிரடியாக மூடப்பட்டது. தற்போது, மாநிலம் முழுவதும், 700 பள்ளிகள் மூடப்படவுள்ள
தாக கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், கடந்த மார்ச்சில் 86 பள்ளிகளுக்கு இறுதிகட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏப்ரல் இறுதி வரை இப்பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், அங்கீகாரத்தை புதுப்பிக்காத, பள்ளிகளின் இறுதிப்பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இதற்கிடையில், 12 பள்ளிகள் தானாக முன்வந்து பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது. மேலும், 40 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளதாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதில் தேர்தல், தேர்வுப் பணிகள் காரணமாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பதற்கு, இரண்டு வார காலமே உள்ள நிலையில், அங்கீகாரம் ரத்தாகும் பெயர் பட்டியல் வெளியிடுவதில் தாமத்தை ஏற்படுத்தினால், கல்வியாண்டு துவக்கத்தில் பெற்றோர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கநேரிடும். இதனால், பள்ளிகளின் விபரங்களை உடனடியாக வெளியிட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
பெற்றோர் கூறுகையில்,'பள்ளிகள் திறக்க இரண்டு வார காலமே உள்ளது. எந்த பள்ளியும் தானாக முன்வந்து, எங்களுக்கு அங்கீகாரம் இல்லை. வேறு பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல முன்வருவதில்லை. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியல் கடைசி நேரத்தில் வெளியிட்டால், பெற்றோர் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பதில் கடும் சிரமம் ஏற்படுவதுடன், தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கும் வகையில், அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளின் விபரங்களை உடனடியாக வெளியிடவேண்டும்' என்றனர்.முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,''பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பெயர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார்.
மதுரை மாவட்ட கல்வித்துறையில் நிரம்பும் பணியிடங்கள்

மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.

முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த ரவி (மேல்நிலை பள்ளிகள்) விருப்ப ஓய்வு பெற்றார். சீனிவாசன் (உயர் நிலை பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார் (தற்போது ஓய்வு).

இப்பணியிடங்களுக்கு குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன், விரகனுார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கரநாராயணன் ஆகியோர் பொறுப்பு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.) சீமான் பதவி உயர்வு பெற்று, கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ. முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சங்கரநாராயணன் டி.இ.ஓ.வாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இவரிடத்தில் மதுரை சத்தியமூர்த்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பால்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை ஆய்வாளர் பணியிடங்களும் காலி: அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கும் பள்ளிகள் துணை ஆய்வாளர் பணியிடங்கள் மதுரை, மேலுார், உசிலம்பட்டி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தல்

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பேனல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் பணிமூப்பு அடிப்படையில் 29.1.2000 வரை பணியில் சேர்ந்த 871 பட்டதாரி ஆசிரியர்கள் விவர பட்டியலை பள்ளிக் கல்வித்துறை இரு நாட்களுக்கு முன் வெளியிட்டது. இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பெயர் விவரம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பட்டியலை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது. இப்பணியை 15 நாட்களுக்குள் முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேனல் வெளியீடு குறித்து பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் முருகன் கூறுகையில், "பட்டியலில் உள்ள உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை விரைவில் அறிவித்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங்கை ஜூன் மாதத்திற்குள் நடத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஆலங்குடியில் தலைமை ஆசிரியை மாயம்

ஆலங்குடியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியயை காணவில்லையென வியாழக்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

ஆலங்குடி காந்திசாலையைச் சேர்ந்தவர் மலர்செல்வம். இவரது மனைவி விவாகேஸ்வரி(45). கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த மே 1-ம் தேதி கறம்பக்குடியில் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்குச் செல்வதாக கூறிச்சென்ற விவாகேஸ்வரி வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து மலர்செல்வம் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் கீதா வழக்குப்பதிந்து மாயமான விவாகேஸ்வரியை தேடிவருகின்றார்.
3 தலைமை ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ததற்கு கண்டனம்

அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில் குறைந்த சதத் தேர்ச்சி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அந்த மாவட்டக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்ததற்கு தமிழ்நாடு தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமி. சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:

பிளஸ் 2 தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 அரசுப் பள்ளிகள் 70 சதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை காரணமாக வைத்து அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 3 பேர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையில் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தலையிட்டு பணியிடை நீக்கத்துக்கான உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, May 15, 2014

கமுதி அருகே பள்ளி வளாகத்திலேயே தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(65). விருதுநகர் மாவட்டம் கல்லூரணி தனியார் மேல் நிலைபள்ளியில் ஆசிரியராக பணியாற்றி 6 ஆண்டுகளுக்குமுன் ஓய்வு பெற்றார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கமுதி தனியார் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் முதல்வராக பணியற்றி வந்தார். இந்த கல்வி ஆண்டில் இன்னும் ஒரு மாதத்தில் ஒய்வு பெற இருந்தார்.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த கோவிந்தன் மாலையில் வேலை முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு செல்வதற்கு பதில் பள்ளியில் இருந்தார். பின்னர் திடீரென்று பள்ளி மாடிக்குச் சென்று வகுப்பறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்து தகலவறிந்த அவரது உறவினர்கள் மற்றௌம் பள்ளி உரிமையாளர் இது குறித்து கமுதி காவல் நிலையத்தில் அளித்தனர். ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வார்கள் அப்துல்லா, திலகவதி ஆகியோர் போலீஸாருடன் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பணி ஒயுவு பெரும் நிலையில் இருந்த முதல்வர் திடீரென செய்த காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதவிப் பேராசிரியர் நியமனம்: தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்வதால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எச்டி. பட்டம் பெற்றும், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் உள்ளனர். இவர்களின் பணிக் காலத்தையும் கணக்கில் கொண்டு அவர்களின் அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.

இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் பெற முடியும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா? 
(ஆ. பழனியப்பன்)

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்
கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும்
பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில்,
கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன? ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...

மதுராந்தகத்தைச் சேர்ந்த மா.ச.முனுசாமி, ஆசிரியர் பணி மீதான பேரார்வம் காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரி பதவியை உதறிவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர். முன்னுதாரண ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்ற முனுசாமி, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

"35 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினேன். எல்லாமே கிராமப்புறப் பள்ளிகள். எல்லோருமே பள்ளிக்கு வரும் முதல் தலைமுறையினர். பெரும்பாலும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். கிழிந்த, பழைய உடைகளை அணிந்து வருவார்கள். சட்டைப் பொத்தான் அறுந்துவிட்டால் சீமைக்கருவேல் முள் குத்திக்கொண்டு வருவார்கள். அவர்களது சட்டைகளை வாங்கி பொத்தான்களை தைத்துக் கொடுத்து அனுப்புவேன். அதைப் பார்த்து அவர்களின் பெற்றோர் அவ்வளவு சந்தோஷப்படுவார்கள். அப்போது இலவசப் புத்தகம் எல்லாம் கிடையாது. கிராமத்தில் வசதியான நபர்களை அணுகி, ‘பிள்ளைகளுக்கு நன்கொடையாகப் புத்தகம் வாங்கித் தாருங்கள்’ என்று கேட்டு வாங்குவேன்.

சில பெற்றோர், தன் பிள்ளையை திடீரென பள்ளியில் இருந்து நிறுத்தி விடுவார்கள். மறுநாள், அவர்கள் வேலை செய்யும் வயலுக்குச் சென்று, அவர்களிடம் பேசி மீண்டும் அந்த மாணவனை பள்ளிக்கு வரவழைப்பேன். பொதுவாக, பிள்ளைகளை அடித்தால்தான், அவரை வாத்தியார் என்று மதிப்பார்கள். ஆனால், நான் மாணவர்களை ஒருபோதும் அடித்தது கிடையாது. ‘என்னடா! எப்ப பார்த்தாலும் உங்க வாத்தியாரு சிரிச்சுப் பேசிக்கிட்டே இருக்காரு? நீங்களும் சிரிக்கிறீங்க’ன்னு பெற்றோர்கள் கேட்பதாக மாணவர்கள் கூறுவார்கள்.

எனக்கு, உதவி தொடக்கக்கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைத்தது. நான் அதை ஏற்கவில்லை. கடைசிவரை ஆசிரியராகவே பணியாற்றி ஓய்வு பெற்றேன். என்னிடம் படித்த பிள்ளைகள் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, அரசு அதிகாரிகளாகப் பணியாற்றுகிறார்கள். அதைவிட பெரிய மனநிறைவு எனக்கு வேறு என்ன இருக்க முடியும்? ஆசிரியர் பணி மிகவும் உன்னதமானது" என்று உருக்கத்துடன் கூறினார் முனுசாமி.

முனுசாமி, முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர். ஆனால், இன்றைய தலைமுறை ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள்?
"மற்ற எல்லா பணிகளையும்விட ஆசிரியர் பணிக்கு தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை அறிவைப் புகட்டுபவர்கள் ஆசிரியர்கள்தான். நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகிற, பல்வேறு துறைகளில் சாதனை புரிகிற ஒவ்வொரு மனிதர்களின் வெற்றியிலும் ஆசிரியர்களின் பங்கு நிச்சயம் உண்டு. அந்த வகையில் ஆசிரியர் பணி என்பது பெருமைக்குரியது" என்கிறார், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதிய, காரைக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சரஸ்வதி.
ஆனாலும், கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

"தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.

கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி?

"மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்? அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர்.

கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி. ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது.

"சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள் வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர்.

சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக் குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான்.
"இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப் புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம்.

இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.

அதேவேளையில், ஆசிரியர்களின் சிலரது செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாக உள்ளது. மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பது, பள்ளிக்கூடக் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வது, சாதிய பாகுபாட்டுடன் நடந்துகொள்வது, மாணவ-மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது எனத் தொடர்ச்சியாக வேதனைமிக்க பல சம்பவங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறுப்பு கல்வித்துறைக்கு உண்டு என்றாலும், அதைக்காட்டிலும் தங்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து, ஆசிரியர் அமைப்புகள் செயல்பட வேண்டியதும் மிக மிக அவசியம்.
சம்பளத்தை அறிய புது வசதி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைத்தெகை, ஆண்டு ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பணப்பலன்கள் கருவூலம் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பணப்பலன்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தாமத்திற்கான காரணம், ஊதிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக, கருவூலத்துறை "வெப்சைட்' டில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ww.treasury.tn.gov.in/public/ecstokenno.aspx என்ற "வெப்சைட்' முகவரிக்கு சென்று, மாவட்டம், கருவூலம், வங்கி எம்.ஐ.சி.ஆர்., கோடு எண், சேமிப்பு கணக்கு எண் ஆகிய விபரங்களை குறிப்பிட்டால், ஊதிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப் பட்டுள்ள நிலையில், பதவி உயர்வுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' விரைவில் நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் பணிமூப்பு அடிப்படையில் 29.1.2000 வரை பணியில் சேர்ந்த 871 பட்டதாரி ஆசிரியர்கள் விவர பட்டியலை பள்ளிக் கல்வித் துறை இரு நாட்களுக்கு முன் வெளியிட்டது. இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் பெயர் விவரம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பட்டியலை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது. இப்பணியை 15 நாட்களுக்குள் முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'பேனல்' வெளியீடு குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் முருகன் கூறுகையில், "பட்டியலில் உள்ள உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை விரைவில் அறிவித்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கை, ஜூன் மாதத்திற்குள் நடத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
தொடக்க கல்வித்துறையில் விடுப்பு எடுத்த ஆசிரியர்,அலுவலர் விபரம் சேகரிப்பு

தொடக்க கல்வித்துறையில் விடுப்பில் உள்ள ஆசிரியர், அலுவலர் விவரங்களை சேகரிக்க அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பலரும் முறையாக விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுமுறையில் உள்ளதாகவும், விடுமுறை காலம் முடிந்த பின்னரும் பணியில் சேராமல் இருப்பதாகவும் தொடக்க கல்வித்துறை இயக்குநருக்கு தகவல்கள் சென்றுள்ளன. இதனால், அவர்களின் விவரங்கள் சேகரிப்பட உள்ளது.இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தொடக்க கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் நீண்ட நாட்களாக விடுப்பில் இருத்தல் மற்றும் விடுப்பு முடிந்தும் பணியில் சேராதவர்கள் விபரங்களை உடனே தொடக்க கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.பெயர், பணி விபரம், கடைசியாக விடுப்புக்கு விண்ணப்பித்த நாள், விடுப்பு காலம், மீண்டும் பணியில் சேர்ந்தாரா இல்லையா என்ற விபரம், விடுப்பு நீட்டிக்கப்பட்டதா, விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் தொடர்ந்து அலுவலகத்திற்கோ, பள்ளிக்கோ வருகை தராதவர்கள் விபரம், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் போன்ற தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின்
போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை அனைத்து வகுப்புகளிலும் 100 சதவீதம் வாசிப்புத் திறனை உருவாக்குதல், மாணவர்களை தொடர் மதிப்பீடு செய்தல் மற்றும் பள்ளி நடைமுறைகளை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு
நெறிமுறைகள் தொடர்பான சிறப்புக் கூட்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் பேசுகையில் கூறியதாவது: நடுநிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிய சம்மதித்தே நியமன ஆணை பெற்று பணி புரிகின்றனர். எனவே பள்ளியின் கல்வித் தர முன்னேற்றத்துக்கு தலைமை ஆசிரியர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் உடன் ஒத்துழைத்து பள்ளி மாணவர்களின் கல்வித் தர வளர்ச்சிக்கு இணைந்து பாடுபட வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் பாடத் திட்டம் செயல்படுத்துதல், பள்ளியின் வளர்ச்சி, பராமரிப்பு, சமூக நல்லிணக்கம், ஆசிரியர் ஒற்றுமை ஆகியவற்றுக்கு பொறுப்பானவர் ஆவார். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து ஆசிரியர்களும் தினமும் வேலை செய்த விவரம் பற்றிய பதிவேட்டில் கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் பொதுவாக தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று எழுதக் கூடாது. அதே போல் பாடங்களின் பெயர்களை மட்டும் எழுதக் கூடாது. குறிப்பிட்ட பாட வேளையில் அந்த ஆசிரியர் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு என்ன கற்பித்தார் என்பதை சுருக்கமாக எழுத வேண்டும். 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்கள் கண்டிப்பாக பாடக் குறிப்பு எழுத வேண்டும். பள்ளிகளின் செயல்பாடுகள் மாதம் ஒரு முறை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால் தான், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் முரண்பாடுகளை விவாதித்து அவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பதால் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை அன்று தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறும். 2014-15ஆம் கல்வியாண்டில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைவைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல் பள்ளி நடைமுறைகûளே செயல்படுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுமார் 150 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின்
போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை அனைத்து வகுப்புகளிலும் 100 சதவீதம் வாசிப்புத் திறனை உருவாக்குதல், மாணவர்களை தொடர் மதிப்பீடு செய்தல் மற்றும் பள்ளி நடைமுறைகளை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு
நெறிமுறைகள் தொடர்பான சிறப்புக் கூட்டம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் பேசுகையில் கூறியதாவது: நடுநிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிய சம்மதித்தே நியமன ஆணை பெற்று பணி புரிகின்றனர். எனவே பள்ளியின் கல்வித் தர முன்னேற்றத்துக்கு தலைமை ஆசிரியர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் உடன் ஒத்துழைத்து பள்ளி மாணவர்களின் கல்வித் தர வளர்ச்சிக்கு இணைந்து பாடுபட வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் பாடத் திட்டம் செயல்படுத்துதல், பள்ளியின் வளர்ச்சி, பராமரிப்பு, சமூக நல்லிணக்கம், ஆசிரியர் ஒற்றுமை ஆகியவற்றுக்கு பொறுப்பானவர் ஆவார். 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து ஆசிரியர்களும் தினமும் வேலை செய்த விவரம் பற்றிய பதிவேட்டில் கண்டிப்பாக எழுத வேண்டும். இதில் பொதுவாக தமிழ், ஆங்கிலம், கணிதம் என்று எழுதக் கூடாது. அதே போல் பாடங்களின் பெயர்களை மட்டும் எழுதக் கூடாது. குறிப்பிட்ட பாட வேளையில் அந்த ஆசிரியர் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு என்ன கற்பித்தார் என்பதை சுருக்கமாக எழுத வேண்டும். 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்கள் கண்டிப்பாக பாடக் குறிப்பு எழுத வேண்டும். பள்ளிகளின் செயல்பாடுகள் மாதம் ஒரு முறை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால் தான், நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைபாடுகள் முரண்பாடுகளை விவாதித்து அவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பதால் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை அன்று தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறும். 2014-15ஆம் கல்வியாண்டில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைவைப் பெறுவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு ஏற்றாற் போல் பள்ளி நடைமுறைகûளே செயல்படுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுமார் 150 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.