Friday, August 28, 2015

1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.


தமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல்- பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் -பதவி உயர்வுக் கலந்தாய்வு, உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் - பதவி உயர்வு கலந்தாய்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம்விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 542 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி


'பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வின் இறுதிக் கட்டமாக, நேற்று முன்தினம் இந்த பணிநிரவல் கலந்தாய்வு துவங்கியது.
ஆனால், 'இந்த பணி நிரவல் நடவடிக்கையில், தெளிவான அணுகுமுறை இல்லை. ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை, திடீரென ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளிக்கு மாற்றினால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். பிற மாவட்டங்களுக்கு, திடீரென ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்வதும் கடினம்' என, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, 'ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டில், மாணவர்கள் எண்ணிக்கை என்ற கணக்கை மாற்றி, இந்த ஆண்டு, ஆகஸ்ட், 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி, ஆசிரியர்கள் பணியிடம் தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், 3,000 ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Friday, August 21, 2015

எஸ்.எஸ்.ஏ., அல்லாத அரசு நடுநிலை பள்ளிகளிலும் கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை


மாணவர்களின் நலன் கருதி, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி, அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., மூலம், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.தமிழகத்தில், 20 மற்றும், 30 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், கூடுதலாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பல பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை நீடிப்பதால், மாணவர் கல்வி நலன் பாதிக்கிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழுள்ள நடுநிலை பள்ளிகளுக்கு, கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவது போல், எஸ்.எஸ்.ஏ., அல்லாத அரசு நடுநிலை பள்ளிகளிலும் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என, கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை, 100க்கு குறையாமல் உள்ள பள்ளிகளில், மொழிப்பாட ஆசிரியர் ஒருவர், கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர் ஒருவர், சமூக அறிவியல் ஆசிரியர் ஒருவர் என,மூன்று பேர் நியமிக்க வேண்டும்.கடந்த, 2010 ஏப்., முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமைசட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு, தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றிய அரசு, எஸ்.எஸ்.ஏ.,அல்லாத பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர் நியமிக்க ஆர்வம் காட்டவில்லை. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்


நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால் கலக்கமடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது 6 முதல் 8 ம் வகுப்பு வரை 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கிட வேண்டும்.
அப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 170 உபரி பணியிடங்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். அவர்களை பணிநிரவல் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. துாரம் அதிகமுள்ள பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துவிடுவார்களோ என்று பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சங்க செயலாளர் குமார் கூறியதாவது: ஏற்கனவே குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறோம். அதிக துாரம் உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தால் பயண செலவு அதிகரிக்கும். துாரத்தை கணக்கிட்டு பணியிடம் வழங்க வேண்டும், என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “முடிந்தவரை பகுதிநேர ஆசிரியர்களை துாரம் குறைந்த பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

Thursday, August 20, 2015

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். அதன்பின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சென்ற ஆண்டு செப்., 26 ல் பணி நியமனம் வழங்கப்பட்டன. இதில் ஒரே காலியிடத்திற்குபல பேரை நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த அனைவருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால், முறைகேடு பணிநியமனம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த ஆண்டு உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 240 உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 130 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பணிநிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: ஒரு பணியிடத்திற்கு பல ஆசிரியர்களை தெரிந்தே நியமித்துவிட்டு, தற்போது பணி நிரவல் செய்கின்றனர். பணி நிரவல் நடக்கும் நாளில் முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம். பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர், என்றார்

பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.


பள்ளிகளில் துவக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மன்றங்கள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் சூழலில், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டத்தில், 'குமரபருவ மன்றம்', 'கலை பண்பாடு இலக்கிய மன்றம்' புதிதாக துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கு, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மன்றங்கள் துவங்கப்படுகின்றன. இவ்வாறு, துவங்கப்படும் மன்றங்கள், ஒன்று அல்லது, இரண்டு மாதங்கள் வரை செயல்படுகின்றன. காலப்போக்கில், தேர்ச்சி விகிதம் என்ற போர்வையில் அனைத்து மன்றங்களும் முடக்கப்படுகின்றன. சில பள்ளிகளில், ஒரு சில ஆசிரியர்களின் ஆர்வத்தின்படி, செயல்பாடுகளை தொடர்ந்தாலும், நிதி ஒதுக்கீடு தொடர்ந்து கிடைக்காததால், மன்றங்கள் பெயரளவில் உள்ளது. கடந்த, 2002ம் ஆண்டு முதல், தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய, ஐந்து மன்றங்கள் உருவாக்கப்பட்டு பாடத்திட்டம் தாண்டிய அறிவை மேம்படுத்தும் நோக்கில், செயல்பட அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இம்மன்றங்கள் செயல்பாட்டில் இருந்தது என்ற சுவடுகளே இல்லாமல் போய்விட்டது. மேலும், கலை இலக்கிய மன்றம், நாடக மன்றம், நுகர்வோர் மன்றம், நலமைய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், என பத்துக்கும் மேற்பட்ட மன்றங்கள் துவக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்தது. தற்போது, சுற்றுசூழல் மன்றங்கள் தவிர, பிற மன்றங்கள் முடங்கியுள்ளன. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களின் மீது பணிசுமைகளை திணிப்பதாலும், நிதியின்மையாலும் இதுபோன்ற மன்றங்கள் செயல்படுவதில்லை. இந்நிலையில், தற்போது மாணவர்களின் வளர் இளம் பருவ பிரச்னைகளை தீர்க்கும் வகையில் 'குமரபருவ மன்றம்' , 'கலை இலக்கிய பண்பாடு மன்றம்' புதிதாக துவங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, 10 லட்சம் ரூபாய் நிதியை மாநில அரசுக்கு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. குமரபருவ மன்றத்துக்கு வரவேற்பு கல்வியாளர் பாரதி கூறுகையில், ''மன்றங்கள் என்பது மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்த பயன்பட வேண்டும். பெயரளவில் மன்றங்கள் துவங்க அறிவிக்கும் அரசு, அதை கண்டுகொள்வதில்லை. கலை இலக்கிய பண்பாடு மன்றம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பெயரளவில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், மத்திய அரசின் உத்தரவு என்பதாலும், நிதி கிடைக்கும் என்பதாலும், அதே பெயரில் அதே செயல்பாடுகளுடன் மன்றங்கள் துவங்க உத்தரவிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. மாணவர்களின் வளர் இளம் பருவ பிரச்னைகளை போக்கும் நோக்கில் துவங்கப்படவுள்ள, 'குமரபருவ மன்றம்' வரவேற்புக்கு உரியது,'' என்றார்.

Wednesday, August 19, 2015

இழுபறியில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் :ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் நிதி இழப்பு


மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர் ஓய்வூதிய பணப்பலன் இன்றி ஓய்வு பெறும் நிலை நீடிக்கிறது.மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் பணியிடம் 75 சதவீத பதவி உயர்வு மூலமும், 25 சதவீத நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் 124 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்டம் தோறும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களுக்கான முன்னுரிமை பட்டியல் கோரப்பட்டது. அப்போது 40 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தது. அதற்கு பிந்தைய நாட்களில் ஓய்வு பெற்று பலர் சென்று விட்டதால், தற்போது 70-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொறுப்பு பணியாக மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு பொறுப்பு என நியமிக்கப்பட்டவர்களில் பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். இதனால், பொறுப்புக்கு பிந்தைய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று வருவதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்குரிய ஓய்வூதிய பலன்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு முன்பு முன்னுரிமை பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதை தொடர்ந்த காலங்களில் பட்டியல் கோரப்படவில்லை. ஏற்கனவே பட்டியலில் பெயர் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்காததால் அவர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்படுபவர்கள் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பணியிடத்துக்கு வருவதில்லை. இதை தவிர்க்க ஆசிரியர்களுக்கு நடத்துவது போல் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் நேரடி கலந்தாய்வை நடத்த வேண்டும். அப்போது அவர் சார்ந்த மாவட்டத்தில் பணியாற்றுவதோடு, விரைந்து செயலாற்றவும் வாய்ப்பு உள்ளது, என்றார்.

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.


இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் வழக்கமாக பதவி உயர்வு என்றாலே போட்டி போட்டுக் கொண்டு செல்வர். ஒன்றிய முன்னுரிமை யில் தங்களது பெயர் மற்றும் வரிசையை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருப்பர். ஆனால் நேற்று 11பேர் பதவி உயர்வு வேண்டாம் என்று கூறி 3 ஆண்டு பணித் துறப்பு செய்து விட்டனர்.
காரணம் இவர்கள் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் சிறப்பு நிலை பெற்று 6% கூடுதலாக ஊதியம் பெறுவது தான். இன்றைய நிலை களில் பதவி உயர்வு சென்றால் 3% மட்டுமே கூடுதலாக ஊதியம் கிடைக்கும். மேலும் தற்போது பெறும் சிறப்பு ப்படி ₹500 ரத்தாகி விடும். விலையில்லா பொருட்கள் பெற்று வழங்குவது உள்ளிட்ட தலைமை ஆசிரியர் பணிச்சுமையும் கூடுதலான வேலை.
மேலோட்டமாக இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன் கீழ் கண்ட அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பணி ஓய்வு பெறுவது இன்னும் எத்தனை ஆண்டுகள் உள்ளது?
மூன்று ஆண்டு பணி துறப்பிற்க்குப் பின் எத்தனை ஆண்டுகளில் பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது?
பதவி உயர்வு நிலை களில் தேர்வு நிலை /சிறப்பு நிலை வாய்ப்புகள்?
அடுத்த பட்டதாரி ஆசிரியர் /நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி
உயர்வு வாய்ப்புகள்?
அடுத்த ஊதியக்குழு ஊதியம் வித்தியாசங்கள்? இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5வது ஊதியக்குழுவில் பதவி உயர்வுக்க்கு 5% கூடுதலாக கொடுத்து 3 ஊதிய உயர்வு வரை கூடுதலாக பெற்றோம். இடைநிலை ஆசிரியர் தேர்வு நிலை +ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலம் சேர்த்து தலைமை ஆசிரியர் நிலையில் தேர்வு நிலை பெற்று வந்தோம். இன்றைக்கு இவற்றை இழந்து உள்ளோம்.
ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி இழந்த பலன்களைப் பெற தொடர் முயற்சி வேண்டும்.

Tuesday, August 18, 2015

'ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'


மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, http://scholarships.gov.in/ என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள், தங்களுடைய விவரங்களை, இதில் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த இணைய வசதியை, மாணவர்களுக்கு தெரியப்படுத்த, இணையதள முகவரி மற்றும் கல்வி உதவித் தொகை குறித்த முழு விவரங்களை, கல்லுாரி
மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிட, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.

'எங்களை பதவி இறக்கம் செய்யுங்க': கெஞ்சும் தலைமை ஆசிரியர்கள்

பணப்பலன் காரணமாக தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்களை பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.4,500 ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,600 ம், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.4,700 ம் வழங்கப்படுகிறது.
ஊதிய முரண்பாட்டை களைய 2011 ல் அமைக்கப்பட்ட ஒருநபர் குழு 2009 மே 31 க்குள் 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தர ஊதியத்தை ரூ.5,400 ஆக உயர்த்தியது. இந்த தர ஊதியம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் தர ஊதியத்தை விட அதிகமாக உள்ளது.
இதனால் 2009 மே 31 முன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற 100க்கும் மேற்பட்டோர், தங்களை தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய வேண்டுமென, தொடக்கக் கல்வித்துறையில் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களை பதவி இறக்கம் செய்ய தொடக்கக் கல்வித்துறை மறுத்துள்ளது.

1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்


இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, 8ம் தேதி துவங்கியது. தொடக்கப்பள்ளி இயக்குனரகம் தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் தனியாகவும், கலந்தாய்வை நடத்தி வருகின்றன.
ஒரு வாரமாக தொடரும் கலந்தாய்வில், மேல்நிலைப் பள்ளிகளில், 430 பேர் பதவி உயர்வு மூலமும், 800 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் மூலமும், 1,230 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 360 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இதேபோல், 50 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கும், பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதேநேரம், தொடக்க கல்வியில், 45 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பணிகளில், 20 இடங்களே நிரம்பின; இன்னும், 25 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்களிலும், புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு


எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள்,
விஞ்ஞானிகள் பங்கேற்கலாம்.
ஆய்வுச்சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 5, ஆய்வுக் கட்டுரைகள் முடிவுகள் செப்டம்பர் 15 ல் வெளியிடப்படும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பரில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும்.ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
A.P.Deshpande, NationalConvenor, 8 th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V.N. Purav Marg, Sion-Chunabhatti (E), MUMBAI 400 022 E.mail : mvp@8thntsc.org indub.puri@nic.in

Friday, August 14, 2015

குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் மீண்டும் அதே இடம் வழங்கக் கூடாது: தமிழக அரசின் முதன்மைச் செயலர் உத்தரவு!!


குற்றச்சாட்டு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் மீண்டும் அதே இடத்துக்கு இடமாறுதல் செய்யக் கூடாது என்று தமிழக அரசு முதன்மைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டு தோறும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும். இந்த ஆண் டுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதில் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து அரசின் முதன்மைச் செயலர் சபிதா பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:கலந்தாய்வு 1.6.15 அன்று ஒரு கல்வியாண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்தவர்கள், இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
இந்த விதிமுறையில் இருந்து நூறு சதவீதம் பார்வையிழந்தவர்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் ஊனமுற்றோர், ராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவி, இருதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள், 40 வயதைக் கடந்த முதிர்கன்னியர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர், வாழ்க்கைத்துணை பணிபுரியும் இடத்துக்கு மாறுதல் கோருபவர்கள் ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இருபாலர் பயிலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் பணியிடங்களுக்கு ஆண், பெண் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். குற்றச்சாட்டு காரணமாக மாற்றப்பட்டவர்கள், மீண்டும் அதே இடம் கோரினால் பணிமாறுதலும் அவர்களுக்கு வழங்கக்கூடாது.இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியாக இருந்தால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்தபின்புதான், மாறுதல் பெற்ற ஆசிரியர் அப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். கணவர், மனைவி தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள் என்ற முன்னுரிமையில் இடமாறுதல் பெற்றவர்கள், 3 ஆண்டுகளுக்குப் பிறகே அடுத்த மாறுதல் வழங்க வேண்டும். சிறப்புநிகழ்வாக கணவர் அல்லது மனைவி திடீரென இறந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் மாறுதல் வழங் கலாம்.
அரசு பெண்கள் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறையை ஆண்கள் பள்ளியிலும் கடைப்பிடிக்க வேண்டும். தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லாதநிலையில் ஆண்,பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம்.இருபாலர் படிக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஆண், பெண் தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்


பள்ளிக்கல்வித் துறையில், 700 ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரே நாளில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கானஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், தொடக்கப்பள்ளித் துறையில், உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி இடமாறுதல், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.நேற்று, பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.இதில், 592 தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்கு உள்ளும், 100 பேர் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் பெற்றனர். இவற்றில், 365 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். மற்றவர்கள், சிறப்பாசிரியர் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டத்தில், இரண்டு தலைமை ஆசிரியர் காலி இடங்கள் மறைத்து வைக்கப்பட்டதாக, திடீர் புகார் எழுந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு மணி நேர கலந்தாய்வு நிறுத்தப்பட்டு, பேச்சு நடத்தி பின் மீண்டும் கலந்தாய்வு நடந்தது

Wednesday, August 5, 2015

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்


ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித் துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி 1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது.
2013-14ம் கல்வியாண்டு தாமதமாக ஜூன் 17ல் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.மதுரை மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 2012-13 கல்வியாண்டு தாமதமாக கலந்தாய்வு நடந்தது. அதற்காக 2014ல் நடந்த கலந்தாய்வில் ஜூன் முதல் தேதி குறிப்பிடாமல் 'சிறப்பு தகுதி நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கு அதுமாதிரி அறிவிப்பு இல்லை. இதனால் கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது. பதவி உயர்வு பெறுவதில் பிரச்னை இல்லை. மூன்று கல்வியாண்டு என்ற நிபந்தனை ஓராண்டாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இரண்டு ஆண்டுகள் பங்கேற்க முடியாது. இது கல்வித்துறையின் நூதனமான முடிவு என்றார்.