Friday, March 27, 2015

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!
தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கான மாத ஊதியம், ஓய்வூதியங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் 31 அல்லது 30 ஆம் தேதியில் (மாதத்தின் கடைசித் தேதி எதுவோ, அந்தத் தேதி) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆனால், இந்த மாதத்தின் இறுதி நாளான 31-ஆம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாது எனவும், அதற்குப் பதிலாக ஏப்ரல் 6-ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என்றும் கருவூல கணக்குத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன காரணம்? நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு-செலவு கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, நிதியாண்டு தொடங்கும் தினமான ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறையாகும். இந்த விடுமுறையைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் அரசு விடுமுறைகள் வருகின்றன. ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தியும், ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளியும் வருகின்றன. இரண்டு தினங்களும் அரசு விடுமுறையாகும். இந்த இரு தினங்களிலும் வங்கிகள் செயல்படாது.
சனிக்கிழமை (ஏப்ரல் 4) வங்கிகள் செயல்படும் என்றாலும், ஊதியப் பட்டியலை வங்கிகளுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடும் மாநில அரசின் கருவூலத் துறையானது செயல்படாது. இதனால், அன்றைய தினமும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை வரவு வைப்பது சிரமம். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) வழக்கம் போல், அரசு விடுமுறை என்பதால், ஏப்ரல் 6- ஆம் தேதியன்று (திங்கள்கிழமை) அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
விடைத்தாள் திருத்தும் பணி: இன்று ஒரு மணி நேரம் புறக்கணிப்பு
'தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, அறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரி, இன்று, ஒரு மணி நேரம் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிக்கப்படும்' என, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், தஞ்சை மாவட்ட தலைவர் ஜோதிமணி தெரிவித்து உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வறைகளில் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, தேர்வறை கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள், பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தேர்வுத் துறை இயக்குனரகத்தின் இந்த உத்தரவு, தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை அச்சமடைய செய்துள்ளது. தேர்வு துவங்கும் முன், மாணவர்கள் தேர்வறைக்குள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை, அறிவுரையாக மட்டுமே சொல்ல வேண்டும் என, விதியுள்ளது. மாணவ, மாணவியரை உடல்ரீதியாக சோதனை செய்யக் கூடாது என்றும் விதியுள்ளது. எனவே, மாணவர்கள் ஆடைக்குள் மறைத்து வைத்துள்ள காகிதங்களை சோதித்து எடுப்பது இயலாத காரியம்.இந்நிலையில், பறக்கும்படை மற்றும் உயரதிகாரிகள் வரும் போது, அறைக்குள் மாணவர்கள் செய்யும் தவறுக்கு, தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது, நீதிக்கு புறம்பானது.
பறக்கும் படையினரும், உயரதிகாரிகளும் தேர்வறைக்கு வந்து சென்ற பின், அறை கண்காணிப்பாளரிடம், மாணவர் பிட் பேப்பர் வைத்து பிடிபட்டால், பறக்கும் படையினரும், உயரதிகாரிகளும் பொறுப்பேற்பார்களா என, ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுகிறது. எனவே, ஆசிரியர் பணியிடை நீக்கம் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், இனிவரும் காலங்களில், தேர்வு பணியில் ஈடுபடுவது பற்றி, ஆசிரியர்கள் பரிசீலனை செய்ய நேரிடும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக, இன்று பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஒரு மணி நேரம், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும். இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Wednesday, March 18, 2015

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்.
தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். மாணவர்களின் திறனை வளர்ப்பது, எளிய முறையில் கல்வி கற்பிப்பது, புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது,
மொழிப் பாடங்களை கையாள்வது உட்பட பல்வேறு வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் பல்வேறு பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன.இதற்கான நிதி, மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளே, சிக்கலையும் ஏற்படுத்துகிறது. தொடர்ந்து நடத்தப்படும் பயிற்சிகளால், மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிரமம் ஏற்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 890 துவக்கப்பள்ளிகள், 293 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ள துவக்கப்பள்ளிகள், பல உள்ளன. அவர்களில், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு கட்டாயமாக செல்ல வேண்டியுள்ளது; இதனால், மற்றொரு ஆசிரியர் மட்டுமே, அனைத்துகுழந்தைகளுக்கும் பாடம் நடத்தி, பாதுகாக்க வேண்டியுள்ளது. நடுநிலைப்பள்ளிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. பயிற்சிக்கு கட்டாயம் 3 ஆசிரியர்கள் செல்ல வேண்டிய இருப்பதால், எஞ்சிய ஆசிரியர்கள், அனைத்து வகுப்புகளையும் கவனிக்க முடியாமல் திணறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு பயிற்சி தொடர்வதால், முதற்கட்ட பயிற்சியில் ஈடுபாடு காட்டும் ஆசிரியர்கள், நாளடைவில் ஆர்வம் காட்டு வதில்லை. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"பயிற்சி பெறுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்மையே பயக்கும்.
இருப்பினும், பயிற்சி பல நாட்களுக்கு தொடர்வதால், பாட வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இறுதி கட்டத்தில், அவசர அவசரமாக அவற்றை நடத்தி முடிக்கவேண்டியுள்ளது. "பாடங்களை தவிர, இதர பதிவேடுகளையும், ஆசிரியர்களே பராமரிப்பது போன்ற பணிகளால், வகுப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பயிற்சிகளை கல்வித்துறை திட்டமிட வேண்டும்,' என்றார்.
4 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வராத ஸ்மார்ட் கார்டு திட்டம்: ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளி கல்வித்துறையால், மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டத்திற்காக,பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்த கல்வித்துறை, எவ்வித தகவல்களையும் தரவில்லை என, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த, 2010-11ம் கல்வியாண்டு முதல், பள்ளிக் கல்வித்துறை சார்பில், பிரத்யேக இணையதளம் அமைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கவும், திட்டம் வகுக்கப்பட்டது.பள்ளிகளிலிருந்து, மாணவர்களின் புகைப்படம், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர், ரத்த பிரிவு, படிக்கும் வகுப்பு, பள்ளி, சமூக நிலை, உயரம், எடை, ஆதார் பதிவு எண் உட்பட தினந்தோறும், பல்வேறு புள்ளி விபரங்களை சேகரித்தது. ஸ்மார்ட் கார்டில், 16 இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு, புகைப்படம் உட்பட மாணவர்களின் அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என அறிவிக்கப்பட்டது.இந்த ஸ்மார்ட் கார்டு, 2011-12ம் கல்வியாண்டில், மாநிலம் முழுவதுமுள்ள, அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் 1.34 கோடி மாணவர்களுக்கும் வினியோகிக்கப்படும் எனஅறிவித்தது.
வங்கி ஏ.டி.எம்., அட்டையைப் போன்று இருக்கும் இந்த கார்டில், தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்; மாணவர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும்.மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, பின், வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு, இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் தவிர்க்கப்படும். தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.இ.எம்.ஐ.எஸ்., இணையதளம் வாயிலாக, இதற்கான பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததாக அறிவித்த நிலையிலும், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகிக்காமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுறது.
அறிவித்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றும், எவ்வித முன்னேற்றமும் இன்றி உள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு, புள்ளி விபரங்களை அனுப்பியே, நாங்கள் சோர்வடைந்து விட்டோம்.இத்திட்டத்தை செயல்படுத்தினால், பல்வேறு பணிச் சுமைகள் குறைக்கப்படும். திட்டங்களை அறிவிப்பது, செயல்படுத்தவா அல்லது ஆசிரியர்களை வாட்டுவதற்காகவா என்பது புரியவில்லை" என்றார்.
ஆசிரியர்களிடம் கட்டாய வசூல்
:திண்டுக்கல் மாவட்டத்தில் 'ஆன்-லைனில்' ஆசிரியர் ஊதிய விபரங்களை பதிவு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1,419 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஐந்தாயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது ஊதிய விபரங்கள் 'சிடி'களில் ஏற்றப்பட்டு கருவூலத்தில் அளிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்க 'இ-பே' முறையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக 'ஆன்-லைனில்' ஆசிரியர் ஊதிய விபரங்கள் ஏற்றப்படுகின்றன.
இதற்கு பழநி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் ஒவ்வொருவரிடமும் ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டாய வசூல் செய்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மண்ட் கூறுகையில், “தனியார் 'இன்டர்நெட்' மையத்தில் பதிவு செய்வதாக கூறி உதவிதொடக்க கல்வி அலுவலகத்தில் கட்டாய வசூல் செய்கின்றனர். உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜன் கூறுகையில், “ஆசிரியர்களிடம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். புகார் குறித்து விசாரிக்கப்படும்,” என்றார்.
திண்டிவனத்தில், ஆசிரியர்களின் சொந்த செலவில் ஏற்பாடு செய்த ஆங்கில உச்சரிப்பு சார்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி
அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் பணிவான வணக்கம். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குறைகூறும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இதுபோன்ற ஆசிரியர்களும் பலர் உள்ளனர் என்று.
திண்டிவனம் அருகில் உள்ள ஒன்றியங்களைச் சேர்ந்த நண்பர்கள் திரு.கலைவாணன், திரு.ராஜேஷ், திரு.மூர்த்தி ஆகியோர் தங்கள் ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும்தங்களுடைய சொந்த செலவில் 21.02.2015 சனிக்கிழமை Teaching of phonetic method ல் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் பயன்படுத்திய வரும் சிறப்பு உக்திகளை பரிமாரிக்கொள்ளும் விதமாகவும் கலந்துரையாடல் கூட்டம் ராஜேஸ்வரி முருகன் மகாலில் நடைபெற்றது. இச்செய்தி அறிந்த விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.சீதாராமன் அவர்கள் அக்கூட்டதிற்கு வந்து சிறப்புரை ஆற்றியதோடு, விடுமுறை தினம் என்றும் பாராமல் கலந்துகொண்ட ஆசிரியர்களையும், சுய ஆர்வத்துடன் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அனைத்து செலவுகளையும் செய்து வெற்றிகரமாக நடத்திய நண்பர்களின் முயற்சியையும் பாராட்டினார். நாமும் அந்த ஆசிரிய நண்பர்களை பாராட்டுவதோடு அல்லாமல் அனைவருக்கும் இதை தெரியபடுத்துவோம். ஆசிரியர் சமூகத்திற்கு மரியாதை சேர்ப்போம்.
அனைவருக்கும் கல்வி இயக்கம், ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மாநிலம் முழுவதும் கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.இந்தத் தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் 3-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு,8-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்றது. இதில் மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறன், புரிந்துகொள்ளும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகளை அறியும் திறன்கள் சோதிக்கப்பட்டன.
அந்தத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி சதம் விவரம் வருமாறு:
கரூர் 78.07, கிருஷ்ணகிரி 77.42, தஞ்சாவூர் 75.01, திருச்சி 71.68, மதுரை 71.50, கன்னியாகுமரி 70.92, திருநெல்வேலி 70.92, நாமக்கல் 70.37, பெரம்பலூர் 70.28, வேலூர் 69.34, சிவகங்கை 69.21,
ராமநாதபுரம் 69.02, திண்டுக்கல் 68.88, திருவள்ளூர் 68.84, நாகப்பட்டினம் 68.64, கோயம்புத்தூர் 68.27, கடலூர் 67.66, தருமபுரி 67.44, விழுப்புரம் 67.03, விருதுநகர் 66.89, திருவாரூர் 66.33, தேனி 65.92, சேலம் 65.70, புதுக்கோட்டை65.48, ஈரோடு 64.01, காஞ்சிபுரம் 64.81,சென்னை 64.28, தூத்துக்குடி 62.52, திருவண்ணாமலை 58.27, நீலகிரி 56.08.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது:
தொடக்கக் கல்வியில் புத்தகப் பாடங்களையும், செயல் வழிக் கற்றல் அட்டைகள் மூலமும் கற்பிக்க வற்புறுத்தப்படுவதால், ஆசிரியர்களாகிய நாங்கள் தவித்து வருகிறோம். ஏதேனும் ஒருவழிக் கற்றல் முறையை அமல்படுத்தவேண்டும். உறுதியாக தரம் உயரும்.
தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் புத்தகங்களைக் கொண்டு மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகிறது என்றனர்.

Saturday, March 7, 2015

மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு
பொள்ளாச்சி அருகே, மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய விடுப்பு அளித்தனர்.
பொள்ளாச்சி அருகே தெற்கு ஒன்றியம் பொன்னேகவுண்டனூர் பகுதி மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 21 மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர் பள்ளியான இங்கு தலைமையாசிரியராக உள்ள ஜெயலட்சுமி மீது புகார் கூறி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் சமசரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
’தலைமையாசிரியர் ஜெயலட்சுமி மாணவர்களை தரக்குறைவாக பேசுவதுடன், அடித்தும் உள்ளார். மேலும், மாணவர்களை அவ்வப்போது பள்ளிப்பணிகளை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, இவரை மாற்றம் செய்ய வேண்டும்,’ என பெற்றோர் தெரிவித்தனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து உதவித்தொடக்க கல்வி அலுவலர் பூம்பாவை கூறுகையில், ”மாணவர்களை தலைமையாசிரியர் பணி செய்ய வற்புறுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர் உத்தரவின் பேரில், தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு மாற்றாக குறிஞ்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டு பள்ளி தொடர்ந்து செயல்படுகிறது,’ என்றார்.
உதவிக்கல்வி அலுவலகங்களில் அலுவலர் பணியில் ஆசிரியர்கள்
திருவாடானை : உதவி கல்வி அலுவலகங்களில், அலுவலர்கள் பற்றாக்குறையால் அப்பணியை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.1993-94 ஆண்டு முதல் ஆசிரியர்களின் டி.பி.எப்.(பொது வருங்கால வைப்பு நிதி) கணக்குகள் சென்னையில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப் படாமல் உள்ளது.
உடனடியாக அதை அனுப்பும்படி அனைத்து உதவிக்கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவு வந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து திருவாடானை உதவி கல்வி அலுவலர்கள் கூறுகையில், "தமிழகத்தில் அனைத்து உதவிக்கல்வி அலுவலகங்களிலும் இப்பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவாடானை உதவிக்கல்வி அலுவலகத்தில் 2 உதவிக்கல்வி அலுவலர்கள், ஒரு சூப்பிரெண்ட், 3 உதவியாளர்கள், ஒரு ஆர்.சி. (ரிக்கார்டு கிளார்க்) ஒரு டைப்பிஸ்ட், 2 ஓ.ஏ. பணியாற்ற வேண்டும். தற்போது 2 உதவிக்கல்வி அலுவலர்கள், ஒரு உதவியாளர், ஒரு ஆர்.சி. மட்டும் பணியில் உள்ளனர். வேறு வழியில்லாமல் இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டியதுள்ளது,' என்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
"தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்"
தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு அவர்களை நியமனம் செய்த தேதி முதல் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் தையல் ஓவியம் உடற்கல்வி இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் 16549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் 2012ம் ஆண்டு நேர்முக தேர்வு மூலம் பணியில் சேர்ந்தனர். தற்போது பள்ளி கல்வித்துறை போட்டி தேர்வு நடத்தி அவர்களை பணி நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே பள்ளி கல்வித்துறை சில ஆண்டுகளுக்கு முன் போட்டி தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் 652 பேரை தேர்வு செய்தது. பின்பு போட்டி தேர்வில் கேள்விகள் சரியானதாக இல்லை எனக்கூறி அவர்களை பணியிலிருந்து நீக்கி விட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே ஆசிரியர்களை தகுதி தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Thursday, March 5, 2015

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா?
அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா? அப்படி எனில் ஆசிரியர் நண்பர்களே உஷார்...
முகநுாலில் பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும், மற்ற புகைப்படங்களையும் அப்லோட் செய்வதற்கு கல்வி துறை தடை செய்ய உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரிவு உபசார விழாவினை பள்ளியில் கொண்டாடியுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து அம்மாணவிகள் மினி பீர் குடிப்பது போன்று புகைப்படங்களை உருவாக்கி அதனை முகநுாலில் சிலர் பரவ விட்டுள்ளனர்
இதனை கல்விதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் இந்த நிகழ்வுக்கு காரணமாணவர்களை தண்டிக்க அரசு தயாராகி வருகிறது.
மேலும் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் சார்ந்த விவரங்களை முகநுாலிலோ அல்லது வேறு முறையிலோ பகிரப்படுவது சட்டபடி குற்றம் எனவும் மீறுவோரை பணி நீக்கம் செய்யவும் அரசு தயாராகி வருகிறது
இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களை வேறு முறையில் பயன்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட அந்த பள்ளி மாணவிகளின் புகைப்படத்தை நம் முகநுால் அன்பர்கள் யாராவது எங்கிருந்தாவது பார்த்து உங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தாலோ அல்லது ஷேர் செய்து இருந்தாலோ உடனடியாக அகற்றவும்.
இனி கவனத்துடன் செயலாற்ற அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்புபகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை செயலகம் வந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணியை சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான அரசு விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் இதுவரை ரூ.2 ஆயிரம் வழங்கப்படவில்லை. இந்த சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7,569 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் நிலை-2 பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். 53,640 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற எண்ணிக்கை அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்
பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
«தேர்வு பணியில் நல்ல அனுபவமும், நேர்மையும் வாய்ந்த துடிப்பான குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களை பறக்கும்படை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களை சோதனையிட பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் பறக்கும்படை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஒரே தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்து பார்வையிடுவதை தவிர்த்து வெவ்வேறு தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து பார்வையிட ஏதுவாக முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கும் தேர்வு மையங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒரு நிலையான பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேறக்கும்படையினர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவரை கையும் களவுமாக பிடிக்கும்போது தேர்வரிடம் இருந்து கைப்பற்றிய விடைத்தாள், ஏனைய ஆவணங்களில் சம்பந்தப்பட்ட தேர்வராலேயே அவரது பதிவு எண்ணை குறிப்பிடச்செய்து அவரது கையொப்பத்துடன் தங்களது அறிக்கையை எழுதி முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பறக்கும்படையினர் முதலில் செல்லும் மையத்தில் வினாத்தாள் கட்டு பிரிக்கும்போதும், கடைசியாக செல்லும் மையத்தில் விடைத்தாள் கட்டு கட்டும்போதும் உடனிருக்க வேண்டும். பேறக்கும்படையினர் தேர்வு மையங்களில் தேர்வர்கள் அச்சமுறும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. தேர்வர்களின் மனநிலை, உடல் நிலை, தேர்வு நேரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.
சேந்தேகத்திற்குரிய தேர்வர்களை மட்டும் சோதித்தால் போதும். அனைவரையும் கட்டாயமாக சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவறுகளை கண்டுபிடிக்கும்போது விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்ற வேண்டும்.பேறக்கும்படையினர் தேர்வு அறைகள் மட்டுமின்றி அறையின் வெளிப்பகுதி, கழிப்பறை, தளப்பகுதிகளை ஆய்வு செய்து முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதாக புகார் எழுந்தது. மாணவர்களின் சத்தம் கேட்டு, சிறிது நேரத்துக்கு பின் கதவுகளை திறந்து வெளியேற்றியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து எழுந்த புகாரின்பேரில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி சுந்தரி மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், பள்ளி முடிந்த பின் வகுப்பறைகளை, அந்தந்த ஆசிரியர்கள் பூட்டுவதற்கு பதிலாக, மாணவர்களே பூட்டிச் சென்ற விவரம் தெரிய வந்தது. எனினும், வகுப்பறையில் வைத்து மாணவர்கள் பூட்டப்பட்டதாக, பெற்றோர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.
இது குறித்த விசாரணை அறிக்கை, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் க. ஜெயமீனா தேவியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் க. ஜெயமீனா தேவி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வகுப்பறையிலிருந்து மாணவர்கள் சென்றதை உறுதி செய்த பின், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்களே அறைகளை பூட்ட வேண்டும். பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது குறித்து, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு அறையில் நாற்காலி: உத்தரவில் மாற்றம் : ஆசிரியர்கள் எதிர்ப்புக்கு பணிந்தது கல்வித்துறை
பிளஸ் 2 தேர்வில், தேர்வு அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நாற்காலி போடத் தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும்,
5ம் தேதி துவங்குகிறது. மாணவர்களை விழிப்புடன் கண்காணிக்க, தேர்வு அறையில், கண்காணிப்பாளர்களுக்கு நாற்காலி போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திஉள்ளனர்.
'மூன்று மணி நேரம் நின்று கொண்டே இருப்பது இயலாத காரியம். சர்க்கரை நோய் பாதித்தோர் சில நிமிடங்களுக்கு மேல் நின்றால் மயங்கி விடுவர். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடல் வியர்த்து அழுத்தம் அதிகமாகும். இதயப் பிரச்னை உள்ளவர்களும் சோர்வாகி விடுவர்' என, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள்
முறையிட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலர் ஜனார்த்தனன் கூறும் போது, ''நாற்காலி போடுவதா, வேண்டாமா என்பதை, ஆசிரியர்களின் வயது மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தேர்வு அறையில், தவறுகள் தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர் சிங்காரவேல் கூறும்போது, ''உடல்நலப் பாதிப்பு குறித்த ஆசிரியர்களின் பிரச்னைகளை, தேர்வுத் துறைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். நின்று கொண்டே இருக்க முடியாதோருக்கு தேர்வுப் பணியில் இருந்து விலக்கு வேண்டும்,'' என்றார்.இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககத்தில் விசாரித்த போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, நாற்காலி தொடர்பாக, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'நாற்காலி போட வேண்டாம் என்பதை ஆசிரியர்களின் வயது, உடல்நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக நாற்காலி தர வேண்டும்' என, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, March 2, 2015

மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லையை தடுக்க, வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிகளில் மாணவிகளுக்கு நேரிடும் செக்ஸ் தொல்லையை தடுக்கும் வகையில், வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பத்திரிகைகளில் செய்தி
சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுக்களுக்கான தமிழ்நாடு மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லைகள் நேரிடும் சம்பவங்கள் குறித்து பிரபல பத்திரிகைகள், டி.வி.களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆசிரியை கொலை
இணையதளங்களையும் செல்போன்களையும் அதிக அளவில் மாணவ சமுதாயத்தினரும் ஆசிரியர்களும் பயன்படுத்திவருவது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு ஏதுவாக அமைந்து விடுகிறது. பாலியல் தொல்லைகள் மட்டுமல்லாமல் கொலை சம்பவங்கள் வரை கல்வி வளாகங்களில் நடக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களில் இருந்து மாணவிகளையும் ஆசிரியைகளையும் காப்பாற்றுவது அரசின் கடமையாகும். சென்னையில் பள்ளி ஒன்றில், பாடங்களை சரிவர படிக்கவில்லை என்று கண்டித்த ஆசிரியை உமா மகேஸ்வரி (வயது 39), 15 வயது மாணவர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த மாணவன் கடந்த 5 ஆண்டுகளாக அங்குதான் படித்திருக்கிறான். அவன் ஒழுங்காக பள்ளிக்கு வரும் மாணவன்தான். ஆனால் அவன் சரிவர படிப்பதில்லை.
தலைமை ஆசிரியர் கைது
நெல்லை மாவட்டம், சூரங்குடியில் பஞ்சாயத்து பள்ளி ஒன்றில் ஒன்பது வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நேரத்துக்குப் பிறகு வகுப்பறையில் அந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதுபோல் ஒரு நாளில் தொல்லை கொடுத்தபோது அந்த மாணவி அழுதுவிட்டார். அவளது அழுகைச் சத்தத்தைக் கேட்டு மற்ற மாணவிகள் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பிவிட்டார். பின்னர் அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
இடைக்கால பணிநீக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் பழனிவேல் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், மாவட்ட கல்வி அதிகாரியின் குழு விசாரணைக்குப் பிறகு இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மனு கொடுத்தேன்
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, நன்னடத்தை மற்றும் இறைபக்தியின் வேரை இழந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கும் மற்ற அரசு அதிகாரிகளுக்கும் கடந்த டிசம்பர் 8-ந் தேதி மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வகுப்பறைகளில் கேமராக்கள்
எனவே, தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகள், முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. என்ற கண்காணிப்பு கேமராக்களை வைப்பதற்கும், அதன்மூலம் வகுப்பறைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை அந்த கல்வி நிறுவனங்களின் தலைமை அதிகாரி கண்காணிக்கவும் ஏற்பாடுகளைச் செய்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பரிசீலிக்க வேண்டும்
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் ஏற்கனவே அனுப்பியுள்ள கோரிக்கை மனுவை இரண்டு மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிளஸ் 2 தேர்வு பணியில் குளறுபடி: முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.
இதற்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூரில் நேற்று நடந்தது. அறை கண்காணிப்பாளர்களுக்கு புதிதாக குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. சிலருக்கு 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களில் பணி வழங்கப்பட்டது. இதை கண்டித்து பழநி, வேடசந்தூரில் ஆசிரியர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதேநிலை மற்ற மாவட்டங்களிலும் உள்ளதால், தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சலேத்ராஜா, ராமகிருஷ்ணன், செல்வராஜ் கூறியதாவது: புதிய முறையில் 15 கி.மீ., தூரத்திற்குள் பணி வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறையை மீறி 50 கி.மீ., தூரத்தில் உள்ள மையங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் தேர்வு பணியை புறக்கணிப்போம், என்றார்.