Saturday, October 4, 2014

அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்!!
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான அகவிலைப்படியைஉயர்த்தி அறிவிக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பத்து லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறு லட்சம் பேரும் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Wednesday, September 3, 2014

விசாரணையில் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள்: இன்று இறுதி பட்டியல்

நல்லாசிரியர் விருதுக்கான தேர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா? என விசாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்., 5ல், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கல்வித் துறை சார்பில் 'நல்லாசிரியர்' விருதுகள் அறிவிக்கப்படும். விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்கள், அவர்களின் பணிக்காலத்தில் எந்த புகாருக்கும் ஆளாகாமல் இருப்பது, சமூக சேவையில் அவர்களின் பங்களிப்பு, ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு மற்றும் மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் விவரம், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 'லிஸ்ட்', நேற்று (ஆக., 2) முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த 'லிஸ்டில்' உள்ள ஆசிரியர்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளதா என விசாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறை உத்தரவிட்டது. விசாரிக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் நேற்று மாலை 'இமெயில்' மூலம் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று (ஆக.,3) காலை வெளியாகலாம் என, கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின் சார்பில் 377 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி (செப்.5), தமிழக அரசின் சார்பில் இந்த ஆண்டு 377 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 201 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 134 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் என மொத்தமாக 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

சென்னையில் வரும் 5-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஆசிரியர்களுக்கு இந்த விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்க உள்ளார்

Thursday, July 17, 2014

கவுன்சலிங் குழப்பத்திற்கு தீர்வு: நீதி கேட்டு ஐகோர்ட் படியேறிய ஆசிரியைக்கு இடமாறுதல்

மதுரையை சேர்ந்த ஆசிரியை சங்கீதா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட் டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன் மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. அதனால், வேறொருவரை அந்த பணியிடத்துக்கு மாற்றிவிட்டனர்.

என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பா லை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி நாகமுத்து நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, வக்கீல்கள் போராட்டம் காரணமாக ஆசிரியை சங்கீதாவே நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நேற்று நீதிபதி முன் முதன்மை கல்வி அதிகாரி ஆஜராகி, ஆசிரியை சங்கீதாவை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை நீதிபதியிடம் அளித்தார். இதையடுத்து மனு மீதான விசாரணையை நீதிபதி முடித்து வைத்தார்.
தரம் உயர்த்தப்படும் அரசுபள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் நடக்குமா?
தரம் உயர்த்தப்படும் அரசுபள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் நடக்குமா? 
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர்,மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு,சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த
பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. உயர்,
மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17)
சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும்கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என,ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும்வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றார்

Wednesday, July 16, 2014

மாணவர்கள் இல்லாததால் மூடுவிழா கண்ட அரசுப்பள்ளி

மாணவர்களே இல்லாததால் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியம் தென்பழனியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கடந்த ஆண்டு வரை 10க்கும் குறைவான மாணவர்களே பயின்று வந்தனர். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் பணியில் இருந்தனர். இக்கிராமத்தில் குடியிருப்புகள் குறைவாகவே உள்ளன. கடந்த ஆண்டில் படித்த மாணவர்களும் வெளியூர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபட்டி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சம்பூர்ணபிரியா கூறியதாவது: மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டும் முடியவில்லை. இதனால் உதவி ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பகுதி பொதுமக்களுடன் கலந்து பேசி, பள்ளியை தற்காலிகமாக மூடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்பும் பட்சத்தில் பள்ளியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
இடமாறுதல் 'கவுன்சிலிங்'கில் முறைகேடு: ஆசிரியை கண்ணீர்; கல்வி அலுவலர் ஆஜர்: ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்'கில் முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில், ஆசிரியை மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராகி கண்ணீர் சிந்தினார். மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஜராகி விளக்கமளித்தார். அவர் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது. ஆனால், 2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சென்றேன். அங்கு, 'உங்களுக்கான இடமாறுதல் உத்தரவு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். உத்தரவு கிடைத்த பின், திருப்பாலை பள்ளிக்குச் செல்லலாம்,' என்றனர். தகவல் உரிமைச் சட்டம் மூலம் விபரம் கோரியபோது, சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலருக்கு, மதுரையிலிருந்து கடிதம் அனுப்பவில்லை, என உறுதியானது. பலமுறை மதுரை முதன்மைக் கல்வி அலுவலரை சந்திக்க முயன்றேன். அவரது நேர்முக உதவியாளரிடம் பேசிய போது,' உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்,' என்றார். இப்பேச்சுக்களை, மொபைல் போனில் பதிவு செய்துள்ளேன். 'கவுன்சிலிங்' முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை; நிறைவேற்றவில்லை. தினமும் 4 மணி நேரம் பயணம் செய்து, புழுதிப்பட்டி பள்ளிக்குச் சென்று வருகிறேன். எனது தாய் உடல் ஊனமுற்றவர். குழந்தையை கவனிக்க வேண்டியுள்ளது. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. 'கவுன்சிலிங்'கில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, பணியாற்ற அனுமதிக்க உத்தர விட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று காலை 11:00 மணிக்கு மனு விசாரணைக்கு வந்தது. வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், மனுதாரரே ஆஜராகி கண்ணீர் மல்க பிரச்னைகளை தெரிவித்தார். நீதிபதி: பெண்கள் அழக்கூடாது. கண்ணகி நீதிகேட்டு போராடியதுபோல், போராட வேண்டும். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகல் 12:00 மணிக்கு ஆஜராக வேண்டும், என்றார். மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆஜராகி விளக்கமளித்தார். நீதிபதி: மனுதாரர் இடமாறுதல் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, முதன்மைக் கல்வி அலுவலர் இன்று (ஜூலை 16) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.
ஆசிரியர்கள் கட்டாய மாறுதல்: வழக்கு தொடர முடிவு

தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க பொதுக் குழு கூட்டம் விழுப்புரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மரியபிரகாசம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சம்பத், சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.

தமிழகத்திலுள்ள 4, 587 ஆசிரியர் பயிற்றுனர்களையும் ஒட்டு மொத்தமாக கட்டாய மாறுதல் செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்வது, கடந்த ஜன.,1ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

லோக்சபா தேர்தலில் மண்டல அலுவலர்களாக பணிபுரிந்தவர்களுக்கு ஊதியத் தொகை வழங்க வலியுறுத்தி இன்று (15ம் தேதி) மாவட்டத் தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை
இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்

மதுரை, பீ.பீ.குளம், சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் சங்கீதா. ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு:சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக (கணிதம்) 2008ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். வயதான தாய், நோய் தாக்கமுள்ள குழந்தை ஆகியோரை உடன் இருந்து கவனிக்க வேண்டி இருந்தது. இதனால் மதுரை, திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றம் செய்ய கோரினேன்.

இதன்படி 24.7.2012ல் மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான கவுன்சலிங்கில் என்னை திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நகல் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு (சிஇஓ) கிடைக்காததால் என்னை அங்கிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் 22.8.2012 வரை மாறுதல் செய்யப்பட்ட திருப்பாலை பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி அந்த இடத்திற்கு திருச்சி மாவட்டத்திலிருந்து கிரிஜா என்பவரை மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

கவுன்சலிங் உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை. தினசரி 4 மணிநேரம் பயணிப்பதில் சிரமம் உள்ளது. எனவே என்னை கவுன்சலிங் உத்தரவுப்படி திருப்பாலை பள்ளிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடப்பதால் மனுதாரரின் வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் ஆசிரியை சங்கீதா நீதிபதி முன் ஆஜராகி வாதாடினார். சிஇஓ நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட் டார். இதைத் தொடர்ந்து சிஇஓ ஆஞ்சலோ இருதயசாமி நீதிபதி முன் ஆஜராகி விளக்கமளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் குறிப்பிடும் புகார் உண்மையென தெரியவந்தால் நீதிமன்றம் கடும் நடவடிக்கையை எடுக்கும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நிலை வரும். இந்த ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது, தற்போதைய நிலை, மனுமீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து மேலதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நாளை (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி முழு அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெண்கள் அழக்கூடாது
வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகிய ஆசிரியை சங்கீதா, நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது பேசிய நீதிபதி, நீதிக்காக போராடிய கண்ணகி மதுரையை எரித்தார். எனவே பெண்கள் எதற்கும் அழக்கூடாது. போராட வேண்டும். அதுவும் ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது என்றார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் 100% தேர்ச்சி இலக்கு: மேயர்

மாநகராட்சி பள்ளியில் கல்வி பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு தேர்வாகியுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் 100 ஆங்கில ஆசிரியர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் டெக் மகிந்திரா அமைப்பு ஆகியவை இணைந்து ஆங்கில பயிற்சியை வழங்கின. இந்தப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும், புதிய 150 ஆசிரியர்களை பயிற்சியில் சேர்க்கும் நிகழ்ச்சியும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி பேசியது: தனியார் பள்ளிகளில் கல்வித்தரம் அதிகம் என்ற நினைப்பு உள்ளது. இதேபோல, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் தகுதி குறைவு என்ற எண்ணமும் உள்ளது.

மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 3 பேர் முழுத் தகுதிகளுடன் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். வரும் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீத தேர்ச்சியடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது. தாய்மொழி சிந்தனைதான் அறிவுடைமையை காட்டும். தாய்மொழி சிந்தனை தாய்ப்பால் போன்றது. எளிமையானது. அதனால் ஆங்கிலத்துக்கு மட்டும் அக்கறை காட்டாமல், தாய்மொழி சிந்தனைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றார் மேயர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை மேயர் பா. பென்ஜமின், துணை ஆணையர் (கல்வி) லலிதா, டெக் மகிந்திரா அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி லவ்லீன் காக்கர், கேம்பிரிட்ஜ் ஆங்கில பயிற்சி பிரிவின் இயக்குநர் ஏஞ்சலா ஃபிரெஞ்ச் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
BRTE: ஆசிரிய பயிற்றுநர்களின் பணிமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுமா?

தமிழகத்தில் வட்டார வளமையத்தின் ஆசிரிய பயிற்றுநர்களை பணிமாறுதல்செய்ய வேண்டுமென்ற அரசின் கட்டாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பயிற்றுநர்கள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். 
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்திடவும், அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதோடு அதை தொடர்ந்து கண்காணிக்கவும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒரு வட்டார வளமையம் உருவாக்கப்பட்டது.

அதில் வட்டார வளமைய மேற்பார்வையாளரின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களின் நிலையிலானஆசிரிய பயிற்றுநர்கள் பணியாற்றினர். அரசு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் செயல்வழிக்கற்றல், எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, படைப்பாற்றல் கல்வி போன்ற கற்பிக்கும் முறைகளை கொண்டு சேர்ப்பது, ஒவ்வொரு பள்ளியிலும் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்வது, பள்ளியில் உள்ள வசதிகள், தேவையானவை குறித்தும் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல்போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசால் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களும் இவர்கள் மூலம் அந்தந்த வட்டார ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

கடந்த 2001-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் சுமார் 8 ஆயிரம் ஆசிரிய பயிற்றுநர்கள் பணிபுரிந்தனர். பயிற்றுநர்களும் பட்டதாரிஆசிரியர்கள் நிலையிலானவர்கள் என்பதால் இவர்களில் ஆண்டுக்கு 500 பேர் வீதம் பணி மூப்பு அடிப்படையில் தனியாக கலந்தாய்வுநடத்தி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்களாக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு காலிப்பணியிடத்துக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு பள்ளிக்கு மாறுதலானவர்கள் போக தற்போது தமிழகமெங்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 135, திருச்சி 165, அரியலூர் 107, சிவகங்கை 136, மதுரை 147, தஞ்சாவூர் 158 என மொத்தம் 4,587 பேர் பயிற்றுநர்களாகஉள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கு மாற்றப்படாமல் அதே வட்டார வளமையத்திலேயே பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் ஆசிரிய பயிற்றுநர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென ஜூன் 9-ம் தேதி மாநில கல்வித் துறைச் செயலர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த மாதம் கடைசி வாரத்தில் இடமாறுதலுக்கான உத்தரவை பெற்ற பயிற்றுநர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இது குறித்து பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரிய பயிற்றுநர்கள் கூறியது: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தந்த வருடமும் தமிழகத்தில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 500 பேர் தேர்வு செய்து தனியாக கலந்தாய்வு நடத்தி பள்ளிக்கு மாற்றம் செய்தனர். இதன்மூலம் அவரவர் விருப்பத்துக்கு பள்ளியை தேர்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக எங்களை பள்ளிக்கு மாற்றம் செய்யவில்லை.

இதுகுறித்து அரசிடம் வலியுறுத்தியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எங்களை வேறு வட்டார வளமையத்துக்கு கட்டாயப்படுத்தி மாற்றியுள்ளது அரசின் விதிமீறலாம். அலுவலராக இருப்பவர்கள் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றம் செய்யலாமென்ற விதியை ஆசிரியர்களாகிய எங்கள் மீது திணித்திருப்பது தவறானது. இந்த நடவடிக்கை அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வட்டார வளமைய பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்ட 13 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத செயலாகும். தற்போது தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள்கூடஅவரவர் விருப்பத்துக்கு கலந்தாய்வு மூலம் வீட்டின் அருகேயுள்ள ஒரு பள்ளியை தேர்வு செய்யும் நிலையில் இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்த எங்களை திடீரென பணியிடமாற்றம் செய்யவேண்டுமென்ற கல்வித் துறை செயலரின் உத்தரவை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Saturday, July 12, 2014

கல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறைகல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறை

தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையும், ஜூன் 16 முதல் 30 வரை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்தாண்டு 'ஆன்லைன்' மூலம் 'கவுன்சிலிங்' நடந்தது.இதில் பல பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பாக, 'முதல் நாளில் மாவட்டத்திற்குள் நடந்த 'கவுன்சிலிங்'கில் காண்பிக்கப்பட்ட காலியிடங்கள், மறுநாள் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை' என்றும், உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல் நாளில் 'சர்பிளஸ்' மாறுதலில் காட்டப்பட்ட கூடுதல் பணியிடங்கள், மறுநாளில் மாவட்டங்களுக்கு இடையே நடந்த மாறுதலில் காண்பிக்கப்படவில்லை. இதனால், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இரவில் நடந்த கவுன்சிலிங்: 'கடந்தாண்டு, காலை 10 மணிக்கு 'கவுன்சிலிங்' துவங்கியது. ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் மதியம் 1 மணிக்கு மேல் தான் அனைத்து நாட்களிலும் துவங்கியது. குறிப்பாக, இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பணிமாறுதல் மாலை துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடந்தது. அதேபோல், மாவட்டங்களுக்கு இடையேயான பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலும் இரவு முழுவதும் நடந்தன.

இதுகுறித்து விசாரித்தாலே பல விஷயங்கள் வெளியே வரும்,' என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். டி.இ.ஓ.,க்கள் மாற்றம் விவகாரம்: இதுதவிர, கல்வித் துறையை 'கலங்கடித்த' பல விஷயங்கள் குறித்தும் உளவுத்துறை போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் 'லிஸ்ட்' பணி மூப்பு அடிப்படையில் வெளிப்படையான அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்தாண்டு, பதவி உயர்வோ, பணியிட மாற்றமோ ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியான உத்தரவுகள் வழங்கப்பட்டு 'ரகசியம்' காக்கப்பட்டது.

மேலும், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தொலைதுார மாவட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் மாற்றப்பட்டு, பின் ஒருசில வாரங்களில் மீண்டும் அவர்கள் ஏன் மாற்றப்பட்டனர் என்றும், அவர்களின் பெயர் விவரங்களும் தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தாண்டு நடந்த ஆசிரியர் 'கவுன்சிலிங்'கில் அதிக எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தி குறித்து சங்கங்கள் சார்பில் அரசு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் அரசியல் குறுக்கீடு மற்றும் பேரம் ஏதும் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது," என்றார்.

காத்திருக்கு 60 உத்தரவுகள்!பள்ளிக் கல்வியில் கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் உட்பட நுாற்றுக்கணக்கான அமைச்சுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, கண்காணிப்பாளர் மாறுதல் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான 60 பேருக்கான உத்தரவுகள் தயாரிக்கப்பட்டு, இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஏதோ காரணத்திற்காக அந்த 60 பேரின் உத்தரவுகளும் காத்திருக்கின்றன, என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 9, 2014

மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் விடுப்பில் கைவைப்பு

அரசு பள்ளி வேலை நாட்களில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி" இன்றி தற்செயல் விடுப்பு நாளாக கணக்கிடப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் (சர்ப்ளஸ்) கலந்தாய்வு ஜூன் 16 முதல் ஜூலை 2ந்தேதி வரை நடந்தது. வேலை நாட்களில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு நாளாக கருதி தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அரசே வேலை நாள் என தெரிந்தே கலந்தாய்வு தேதியை நிர்ணயித்தது. கலந்தாய்வில் பங்கேற்ற நாளை பிற பணியாக (ஆன் டியூட்டி) கணக்கிட வேண்டும். ஆனால் தற்செயல் விடுப்பு நாளாக அறிவித்துள்ளனர்.

சொந்த அலுவலுக்காக எடுக்கும் விடுப்பு மட்டுமே தற்செயல் விடுப்பாகும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இது குறித்து வலியுறுத்தியபோது, தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்படும் என நம்பிக்கை அளித்தனர்.

மாவட்ட கல்வித்துறை அலுவலர்களிடம் இருந்து உத்தரவு எதுமில்லை என தலைமை ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இந்த நியாயமற்ற செயலால் 2 அல்லது 3 நாள் வரை பல ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்" என்றார்.

Wednesday, July 2, 2014

தேர்வு கட்டணத்தில் முறைகேடு
கல்வித்துறை அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன்(45). கடந்த 2012-13ம் ஆண்டிற்கு தேர்வுத்துறை கட்டணமாக ரூ.15 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈ-பார்ம் (மின்னணு பதிவு) மூலம் மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்டது போன்று தேர்வு கட்டணத்தில் முறைகேடு செய்து சந்திரசேகரன் சென்னை பள்ளி கல்வித்துறைக்கு கணக்கு அணுப்பியுள்ளார். இதற்கிடையே கடலூர் மாவட்ட கருவூலத்துறை தங்கள் கணக்கிற்கு வந்து சேரவேண்டிய கல்வித்துறையின் பணத்தொகை குறைந்துள்ளது குறித்து சென்னை பள்ளி கல்வித்துறைக்கு விளக்கம் கேட்டது.

இது தொடர்பாக கோப்புகளை சென்னை பள்ளிக் கல்வித்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அலுவலர் சந்திரசேகரன், போலியாக மாவட்ட கல்வி அதிகாரி மல்லிகா கையெழுத்திட்ட கணக்கை சமர்ப்பித்து தேர்வு கட்டணம் ரூ.15 லட்சம் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையின் பேரில் கடலூர் கல்வி அலுவலக உதவி பிரிவு அலுவலர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மரணமடைந்து 22 ஆண்டுக்கு பிறகு வந்த பதவி உயர்வு: போராடி பெற்றார் மனைவி

அரசு ஊழியருக்கு ஓய்வுபெற்று 25 ஆண்டுகளுக்கு பின்னர் பதவி உயர்வு கிடைத்துள்ளது. மரணமடைந்து 22 ஆண்டாகிய நிலையில் அவரது மனைவி அதற்கான உத்தரவை போராடி பெற்றுள்ளார். மார்த்தாண்டம் அருகே பம்மத்தை சேர்ந்தவர் ரசலையன். இவர் மேல்புறம் யூனியன் அலுவலகத்தில் 1978-1980 ஆணையாளராக பணி புரிந்தார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 1983ல் பதவியிறக்கம் செய்யப்பட்டு விரிவாக்க அலுவலராக 3 ஆண்டுகள் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, குருந்தன்கோடு யூனியனில் பணியாற்றியபோது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 1983ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 1984ல் சஸ்பெண்ட் விலக்கி கொள்ளப்பட்டு சேலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் 3 ஆண்டு பதவியிறக்க தண்டனை மற்றும் சஸ்பெண்ட் ஆகியவை என 5 ஆண்டாக அதிகரித்து போனது. பதவியிறக்க தண்டனை நிறைவு பெற்ற பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலராக முன்சிறை யூனியன் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். 1989ல் ரசலையன் பணி ஓய்வு பெற்றார். பின்னர் 1992ம் ஆண்டு ரசலையன் மரணமடைந்துவிட்டார்.

இதனிடையே, தன்னுடைய பதவியிறக்க ஆணையை செய்ய வேண்டும் என்று கோரி 1988ல் தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ரசலையன் மறைவுக்கு பிறகு இவ்வழக்கை அவரது மனைவி சரோஜம் தொடர்ந்து நடத்தி வந்தார். தீர்ப்பாயம் 2002ல் ரசலையனுக்கு வழங்கப்பட்ட பதவியிறக்க தண்டனையை ரத்து செய்தது. மேலும் அவர் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றியதாக தீர்ப்பு வழங்கியது. ஆனால் அரசு தரப்பில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
தீர்ப்பாய உத்தரவை அரசு அமல்படுத்தக்கோரி ஐகோர்ட்டில், 2002ல் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டும் தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த உத்தரவிட்டது. ஆனால், அரசு தரப்பில் பதவி உயர்வு வழங்கவில்லை. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் பதவி உயர்வுகளை முன்தேதியிட்டு 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்று 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த மே மாதம் 27ம் தேதி தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பிரஜேந்திர நவ்நீத் குமரி மாவட்ட கலெக்டருக்கு பிறப்பித்த உத்தரவில் ‘பணியில் ரசலையன் பெற்ற பதவி உயர்வான கோட்ட வளர்ச்சி அலுவலர் (தற்போது ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர்) பதவி உயர்வை அளித்துள்ளது. இதுதொடர்பாக ஊதிய நிர்ணயம் செய்து உரிய கருத்துரு பணிபதிவேட்டுடன் அனுப்ப வேண்டும்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983ல் கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு மரணமடைந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 29, 2014

கட்டாய பணிமாறுதலை கைவிட வேண்டும்

கட்டாயப் பணிமாறுதல் என்ற முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

ஆசிரியர் பயிற்றுநர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை திரும்பப் பெற வேண்டும், 4857 ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும் மாறுதல் அளித்திருப்பது விதிகளுக்கு புறம்பானது. அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலத் தலைவர், நிறுவனர் கே.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி.மணிவண்ணன், மாநிலச் செய்தித் தொடர்பாளர் ப.ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

மாநிலப் பொதுச் செயலர் ஜெ.ரவி, பொருளாளர் கார்த்திகேசன், தலைமை நிலையச் செயலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.

கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் 10 மணிக்கு தொடங்க வேண்டிய கலந்தாய்வு இணையதள சர்வர் செயல்படாத காரணத்தால் பிற்பகல் வரை கலந்தாய்வு தொடங்கவில்லை. பிற்பகல் 2 மணிக்கு பிறகு தொடங்கிய கலந்தாய்வில் முதல் கட்டமாக பட்டதாரி ஆசிரியர்கள்மாவட்டம் விட்டு மாவட்டம் விட்டு பணியிட மாறுதல் நடைபெற்றது. இதில் 8 பேருக்கு மட்டும் விரும்பிய மாறுதல் கிடைத்தது.

தொடர்ந்து சிறப்பாசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் 7 பேருக்கு பணி இடமாறுதல் கிடைத்தது. இரவு 10 மணியை கடந்த நிலையில் இணையதள சர்வர் இயங்காததால் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் தேக்கம் ஏற்பட்டது.இதனால் கலந்தாய்வுக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்தனர்.நள்ளிரவில் 2 மணிக்கு பிறகு கலந்தாய்வு சர்வர் செயல்படத் தொடங்கியதால் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தூக்கத்தை இழந்து பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த கலந்தாய்வில் ஒருவருக்கு கூட வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதல் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.பின்னர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது. இணையதள சர்வர் சரிவர இயங்காத காரணத்தால் அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு பல மணி நேரம் தாமதமாக

கலந்தாய்வில் குளறுபடி:

கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் காலி பணியிடங்கள், பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. கலந்தாய்வில் முறையான நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் .

1.வாணக்கன்காடு PUMS
2.கிருஷ்ணம்பட்டி PUMS
3.அதிரான் விடுதி PUES
4.குலப்பென்பட்டி PUMS
5.ராசாக்குடியிறுப்பு PUES
6.தெக்கிக்காடு PUMS
7.தெக்கிக்காடு PUMS
8.குறும்பிவயல் PUMS
9.வெள்ளாளவிடுதி PUMS
10.மேலப்பட்டி PUES
11.கருக்காக்குறிச்சி PUMS
12.முத்தானபட்டி PUES
13.கிளாங்காடு PUES
14.சொக்கம்பேட்டை PUES
15.புதுக்கோட்டை விடுதி PUMS
16.விளாரிப்பட்டி PUES
17.சூரியன் விடுதி PUES
18.மைலன்கோன்பட்டி PUMS

19.ராங்கியன்விடுதி புதியது PUMS
20.ராங்கியன்விடுதி பழையது PUES
21.ஒடப்பவிடுதி PUMS
22.ஒடப்பவிடுதி PUMS
23.குளந்திரான்பட்டு PUMS
24.சாஞ்சாடிதெருPUES
25.பாப்பாப்பட்டி PUMS

Thursday, June 26, 2014

ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வராததால் மாணவ–மாணவியர் படிப்பு பாழாகிறது: பொதுமக்கள் புகார்

அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையம் பள்ளிக்கு ஆசிரியர்கள் ஒழங்காக வராததால் மாணவ–மாணவிகள் படிப்பு பாழாவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவினாசி ஒன்றியம், ராவுத்தம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 5–ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது 37 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–

இப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை. இங்கு தனித்தனியே இரண்டு கட்டிடத்தில் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. சில நாட்களில் ஒரு கட்டிடம் பூட்டியே இருக்கும்.

கடந்த 23–ந் தேதி தலை மை ஆசிரியர் வரவில்லை. மற்றொரு ஆசிரியர் காலை 9.45 மணிக்கு வந்தார். அதுவரை பள்ளி மாணவ–மாணவிகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தாமதமாக வந்த ஆசிரியரிடம் ஏன் காலதாமதமாக வந்தீர்கள் என நாங்கள் கேட்டதற்கு உங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று கூறுகிறார்.

முதலில் 50 மாணவர்கள் வந்த பள்ளியில் தற்போது வருகை குறைந்து கொண்டே போகிறது. மாணவ–மாணவிகளின் நலன் கருதி தினசரி ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தகவல் தெரிவித்ததும் அவினாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பள்ளிக்கு வந்து அங்கிருந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.
'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விண்ணப்பித்தும் பெயர் இல்லை; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

மதுரையில் பொது மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களின் பெயர்கள் விடுபட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜூனில் துவங்கிய மாறுதல் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க விரும்பிய ஆசிரியர்கள், ஏப்.,லில் விண்ணப்பித்தனர். தலைமையாசிரியரிடம் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், கல்வித் துறை குறிப்பிட்டிருந்த நாளுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு தலைமையாசிரியர்கள் தான் பொறுப்பு. ஆனால், மாநிலத்தில் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும், இதனால் 'கவுன்சிலிங்'கிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பிரபாகரன் கூறியதாவது:தலைமையாசிரியர் கவனக்குறைவால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரத்தை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேலுார் கல்வி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில், 5 ஆசிரியர்கள் பெயர் விடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம் விடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே, விண்ணப்பம் அளித்து, விடுபட்ட ஆசிரியர்களையும் 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க வாய்ப்பளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Wednesday, June 25, 2014

மாணவர் ஆலோசனைக்குழு என்னாச்சு? செயல்பாடின்றி கிடப்பதாக புகார்

வளர் இளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், தங்களின் பாதையை நல்வழிப்படுத்த, அரசுப்பள்ளிகளில் துவங்கப்பட்ட மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு, தற்போது செயல்பாடின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு கல்வியில் பின்னடைவு, தன்னை சுற்றியுள்ளவர்களின் மீது வெறுப்பை ஏற்படுத்தி தீய செயல்களை செய்யத் துாண்டுகிறது. குறிப்பாக வளர் இளம் வயதில் இருக்கும் 9,10,11,12 வகுப்புகளிலுள்ள மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால வாழ்விற்கு ஏற்ற வழியைக் காட்டிலும், தீய பாதையாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்த பாதையில் செல்லவே விரும்புகின்றனர்.
இதற்கு காரணம் மாணவர்கள் மனதளவில், நிலையாக ஓரு முடிவு எடுக்க தயாராக இல்லை என்பது மட்டுமே. மாணவர்களின் இந்நிலையால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தற்போது அதிகரித்துள்ளது.

இதை தவிர்க்கவே கல்வித்துறை, ஒவ்வொரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டது. இக்குழுவில், பள்ளித்தலைமையாசிரியர் தலைவராகவும், பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் இருவரும், ஆண்கள் மற்றும் இருபாலார் பள்ளிகளில் இருபால் ஆசிரியர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். பள்ளிகளின் சார்பில் ஆலோசனை நிபுணர் ஒருவரை நியமித்து, மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு, தங்களின் பிரச்னைகளை எதிர்கொள்வது, சுயசிந்தனையை வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கும்படி அரசு அறிவித்ததது. தற்போது இக்குழுவினை செயல்படுத்த, பெரும்பாலான பள்ளிகள் மறந்துவிட்ட நிலை உருவாகியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களை வாழ்க்கையில் மேம்பட பல திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்துகிறது. இருப்பினும், அத்திட்டங்கள் முழுமையாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க தவறுகிறது என புகார் எழுந்துள்ளது.

உடுமலை, சுற்றுப்பகுதியில் 27 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தனித்திறன்களை வளர்ப்பதில், கல்வியில் தேர்ச்சி, விளையாட்டு துறையில் வெற்றி உள்ளிட்ட சாதனைகளை பல பள்ளிகள் படைத்து வருகின்றன. சில பள்ளிகளில் உள்ள வசதி குறைபாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, விளையாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்காதிருப்பது போன்றவற்றால் மாணவர்களின் திறமை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, கல்வித்துறை துவங்கிய மாணவர்களுக்கான ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டம் செயல்பாடின்றி திட்டமாக மட்டுமே உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன்கருதி கல்வித்துறை வெளியிடும் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்துவதில், பள்ளிகள் அலட்சியம் காட்டி வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை கல்வியாளர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. தற்போது நிகழ்ந்து வரும் குற்றங்கள் பெரும்பாலும் பள்ளி மாணவர்களை சுற்றியே நிகழ்கிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கான ஆலோசனைக் குழு பள்ளியில் துவங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களை நல்வழிபடுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இக்குழு, மாநில அளவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் மட்டுமே மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதிலும், குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே. மேலும், கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இக்குழு, இந்த ஆண்டு நடைமுைறயில் உள்ளதா என்பதே பல பள்ளிகளுக்கு சந்தேகமாக உள்ளது. இதுபோன்ற திட்டங்கள் முறையே செயல்படுகிறதா என கல்வித்துறை ஆய்வு நடத்தி, இத்திட்டங்களின் மூலம் மாணவர்கள் முழுமையாக பயனடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வி அதிகாரி என்ன சொல்கிறார்? திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆனந்தி கூறுகையில், ''அனைத்து பள்ளிகளிலும் இக்குழு செயல்பட்டு வருகிறது. குழுவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அவ்வப்போது பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செயல்படுத்தாத பள்ளிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என துணை மாநில கணக்காயர்(நிதி) வர்ஷினி அருண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்கு அறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (டி.டி.ஓ.) ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப் சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில் பணியாற்றினார்களோ, அந்த அலுவலக டி.டி.ஓ.விடம் தங்களின் ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், 2013 -14 -ஆம் ஆண்டு முதல், ஜிபிஎப் சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டு அறிக்கை நகல்கள் இனி மாநில கணக்காயர் அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்பு நிதியாண்டு முதல், ஜிபிஎப் ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 24, 2014

திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் காலிப்பணியிடத்தை மறைத்ததாக புகார் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடம் மறைக்கப்பட்டதாக புகார் கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பணி நிரவலுக்கான கலந்தாய்வு மேலப்புதூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. இதுவரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

நேற்று காலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நேற்று காலை குவிந்தனர். காலையில் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் மொத்தம் 13 ஒன்றியத்தில் 20 இடங்களுக்கு நடந்தது. இதில் 18 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

உள்ளிருப்பு போராட்டம்
இந்நிலையில் முசிறி ஒன்றியத்தில் காமட்சிப்பட்டி பள்ளி, நடராஜநகர் பள்ளி ஆகிய 2 இடம் காலியிடமாக அறிவிக்கப்பட்டது. இதில் காமாட்சிப்பட்டி தொடக்கப்பள்ளி பணியிடம் கலந்தாய்வில் மறைக்கப்பட்டு, மணலிஅய்த்தான்பட்டி பள்ளியில் காலியிடம் இருப்பதாக நேற்று அதிகாரிகள் அறிவித்ததாக தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

மணலிஅய்த்தான்பட்டியில் தலைமை ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிற போது, அந்த இடத்தை காலியிடமாக திடீரென அறிவிக்கப்பட்டதற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கலந்தாய்வு நடந்த வகுப்பு அறை முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வன் உடன் இருந்தார்.

தடுத்து நிறுத்தம்
அப்போது காமாட்சிப்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை கலந்தாய்வில் நிரப்ப வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த பணியிடம் நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஆசிரியர்கள் சம்மதிக்கவில்லை.

முசிறி ஒன்றியத்தில் 2 இடமும் நிரப்பப்படாமல் விட்டு வைத்து விட்டு அடுத்த கட்டமாக இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ஆசிரியர்கள் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து வகுப்பறையில் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் 2 இடங்களை நிரப்பப்படாமல் விட்டு, விட்டு இடைநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலந்தாய்வு நடந்த பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு பாலக்கரை சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக 200–க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் நேற்று காலை குவிந்தனர். மொத்தம் 70 இடங்களில் 41 பேர் விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர். இதற்கான ஆணைகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார் வழங்கினார். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதுகலை ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
ஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல்; மாணவர்கள் வெளியேறும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஆசிரியர்களுக்கிடையே, கோஷ்டி பூசல் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு பள்ளியில், டி.சி., வாங்கி சென்று, வேறு பள்ளியில் மாணவர்கள் சேரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில், கடந்த, 1968ல், உயர்நிலைப்பள்ளி துவக்கப்பட்டது. இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள ரெட்டிப்பாளையம், ராந்தம், செம்மியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, பல்வேறு பகுதிகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.இந்த பள்ளி, கடந்த, 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இந்த பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், ப்ளஸ் 2 வரை, 150 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்களுக்கு, நான்கு பட்டதாரி ஆசிரியர், இரு இடைநிலை ஆசிரியர், இரு தொழிற்கல்வி ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என, பத்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இதில், நடப்பாண்டு, ப்ளஸ்2 வகுப்பில், 12 மாணவர், எட்டு மாணவி என, 20 பேர் மட்டுமே உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி.,யில், 16 மாணவர், 25 மாணவி, என, மொத்தம் 41 பேர் படித்து வருகின்றனர். நடந்து முடிந்த, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில், மொத்தம், 36 மாணவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி, 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற, 25 மாணவர்களும், இதே பள்ளியில் மீண்டும், ப்ளஸ்1 வகுப்பில், சேர்ந்து படிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 மாணவர்கள் டி.சி.,யை பெற்று, வேறு பள்ளியில் சேர்ந்துள்ளனர். மீதி உள்ள, பத்து மாணவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த பள்ளியில் படித்தவர்களே, ப்ளஸ்1 வகுப்பில், அதே பள்ளியில் சேராமல் வேறு பள்ளியில் சேர்வதை கண்டு, மற்ற கிராமத்தை சேர்ந்த மாணவர்களும், பெரணம்பாக்கம் பள்ளியில் சேராமல், தேவிகாபுரம், போளூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சேர்ந்தனர். எனவே, இந்த ஆண்டு, ப்ளஸ்1 வகுப்பில், மாணவர்கள் சேர்வதற்கு வாய்ப்பில்லை, இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு, ப்ளஸ் 2 வகுப்புக்கும், இதே நிலை தொடரும் அபாயம் உள்ளது. இதனால், இதுவரை மேல்நிலைப்பள்ளியாக இருந்த, இந்த பள்ளி வருங்காலங்களில், உயர்நிலைப்பள்ளியாக மாற வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பள்ளியில், ஆசிரியர்களுக்கிடையே கோஷ்டி பிரச்சனை ஏற்பட்டு, பள்ளி நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. கல்வி துறையில், உயர் அதிகாரிகளும், கிராமப்புற பள்ளிகளில், ஆய்வு செய்ய வருவதில்லை. எனவே தான், இந்த பள்ளி நிர்வாக சீர்கேட்டால் சிக்கி தவிக்கின்றன.
மேலும், பணி விகிதாச்சாரத்தை சமன்படுத்தி, தேவையான முதுகலை ஆசிரியர்களை நியமித்து, தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களை மாற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ப்ளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதுகுறித்து, திருவண்ணாமலை சி.இ.ஓ., பொன்னையா கூறியதாவது: கவுன்சிலிங் மூலம் வசதியான பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் இடம்மாறி செல்வதை எங்களால் தடுக்க முடியாது. இதனால், கிராமப்புற பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. மாவட்டம் முழுவதும், எந்தெந்த கிராமப்புற பள்ளிகளில், எவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்பதை கணக்கெடுத்து, மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Saturday, June 21, 2014

தொடக்க கல்வி பள்ளி
ஆசிரியர் கலந்தாய்வு மாறுதலில் முறைகேடு DINAKARAN
தொடக்க கல்வி பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதலில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதல் ஜூன் 18 முதல் நடைபெற்று வருகிறது. அரசாணையில் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாணைக்கு புறம்பாக கலந்தாய்வு மாறுதல் நடைபெறுகிறது. ஜூன் 24ம் தேதி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் என ஆணையில் உள்ளது.
இதற்கு மாறாக, வெளிமாவட்டத்தில் இருந்து பணி நிரவல் உள்ள ஒன்றிய பள்ளிகளில் மாறுதல் ஆணை பெற்று, 19ம் தேதியே சில ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டத்தில் அதிக அளவில் முறையற்ற மாறுதல் நடைபெறுகிறது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில், இணையதளத்தின் மூலமாக மாவட்ட மாறுதல் நடைபெறும் என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், மேலிடத்து உத்தரவு என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே, இந்த முறையற்ற மாறுதலை தடுக்க பள்ளிக் கல்வி துறை செயலர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை வெளியிட்டும் நிலுவை பணம் தாமதம்: 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிப்பு
அரசாணைப்படி அகவிலைப்படி நிலுவை தொகை வழங்காததால், 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1988 ஜூன் 1 முதல் 1995 டிச.,31 வரை அகவிலைப்படி குறைவாக வழங்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் அகவிலைப்படியை கணக்கிட்டு, நிலுவைத்தொகையை வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, 1988 ஜூன் 1 முதல் 1995 டிச.,31 வரை, ஓய்வுபெற்றவர்கள் தற்போது உயிருடன் இருந்தால் அவர்களுக்கு அகவிலைப்படிக்கான நிலுவை தொகையை வழங்க 2013 ஆக.,23 ல் அரசாணை வெளியிடப்பட்டது. 11 மாதங்களாகியும், அரசாணை நிறைவேற்றப்படாததால், 20 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பொன்னையா கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே தற்போது தள்ளாத வயதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இனிமேலும் காலதாமதப்படுத்தாமல், அரசாணையை நிறைவேற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். இறந்த ஓய்வூதியர்களின் குடும்பத்தினருக்கு பண பலன் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றார்.

Thursday, June 19, 2014

சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..! தே.சாலமன்

கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
5 முதல் 12 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் பணி அமர்த்திட வேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும், வாரத்துக்கு 3 நாள்கள் வேலை நாள்கள் என பணி நிர்ணயம் செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாறாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வெகு தொலைவில் உள்ள பள்ளிகளிலும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூரம் அதிகம், குறைவான சம்பளம் போன்ற பலக் காரணங்களால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணியை விட்டு விலகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மட்டும் மே மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையினாலும், மாணவர்களின் நலன் கருதியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முழு நேரமாகவே பணியாற்றிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு, பணி பளுவும் கூடியதாகத் தெரிகிறது.
இவ்வளவு சிரமங்களுக்கிடையே தங்கள் கஷ்டத்தை மறந்து சிறப்பாசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
வழக்கமாக ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் இடமாறுதல் கலந்தாய்வு போல், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கும் (கவுன்சலிங் முறை) தமிழக அரசு நடத்தினால் சொந்த ஊருக்கு அருகே பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறப்பு ஆசிரியர்களின் ஊதியமும் குறைவு; பணியிடமும் வெகு தொலைவில்..! தே.சாலமன்

கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் பணியாற்றி வரும் தங்களுக்கு இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று சிறப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 2012ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 1,000 பேர் உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
5 முதல் 12 கி.மீ தூரத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் பணி அமர்த்திட வேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும், வாரத்துக்கு 3 நாள்கள் வேலை நாள்கள் என பணி நிர்ணயம் செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இவர்களில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்படவில்லை. இதற்கு மாறாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும், வெகு தொலைவில் உள்ள பள்ளிகளிலும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூரம் அதிகம், குறைவான சம்பளம் போன்ற பலக் காரணங்களால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணியை விட்டு விலகியுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மட்டும் மே மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையினாலும், மாணவர்களின் நலன் கருதியும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் முழு நேரமாகவே பணியாற்றிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு, பணி பளுவும் கூடியதாகத் தெரிகிறது.
இவ்வளவு சிரமங்களுக்கிடையே தங்கள் கஷ்டத்தை மறந்து சிறப்பாசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
வழக்கமாக ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் இடமாறுதல் கலந்தாய்வு போல், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கும் (கவுன்சலிங் முறை) தமிழக அரசு நடத்தினால் சொந்த ஊருக்கு அருகே பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கவுன்சலிங் தேதி ஒத்திவைப்பு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடக்க இருப்பதால் அதற்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களின் வசதிக்காக மாவட்ட மாறுதல் கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் மாவட்ட மாறுதலுக்கான கவுன்சலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 28ம் தேதிக்கு பதிலாக 30ம் தேதி மற்றும் ஜூலை 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கவுன்சலிங் 21ம் தேதிக்கு பதிலாக ஜூலை 2ம் தேதி நடக்கும். மேற்கண்ட இரண்டு கவுன்சலிங்கும் ஆசிரியர்களின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் இருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தை தேர்வு செய்யும் வகையில் ஆன்லைன் மூலம் நடக்கும். மற்ற கவுன்சலிங் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி வழக்கம்போல நடக்கும். இவ்வாறு இயக்குனர் இளங்கோவன் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

143 ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி

அனைத்து மாவட்டங்களிலும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கவுன்சலிங்கில் 1,069 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 286 பேர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் உத்தரவு பெற்றனர். மேலும், 101 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. இதனால் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 2 நாள்கள் நடைபெறும். பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஜூன் 21-க்கு பதிலாக ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும். ஆசிரியர்களின் பயணத்தைக் குறைக்கும் வகையில் இப்போது பணிபுரியும் மாவட்டத்திலிருந்தே தங்களுக்கு விருப்பமான மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.

பிற கலந்தாய்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

530 பேருக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் 1,069 நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இவர்களில் 286 பேர் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்றனர். மேலும் 101 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும், 143 பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பதவி உயர்வு பெற்றனர்.

Monday, June 16, 2014

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 3,000 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 1995ம் ஆண்டுக்குமுன் ஒவ்வொரு பள்ளிகளிலும், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு என தனித்தனி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 1995க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், இப்பணியிடத்தை 'உயிரியல்' என மாற்றி, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாறுதல் 'கவுன்சிலிங்'கின் போதும், இப்பாடப் பிரிவு ஆசிரியர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக, கடந்தாண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்தாண்டு வெளியிடப்பட்ட 'கவுன்சிலிங்' அறிவிப்பில், 'பொதுமாறுதல் கோரும் ஆசிரியர், உயிரியியல் பாட ஆசிரியர் என்றால், 'உயிரியல்' என்றும் ஆசிரியரின் முதன்மை பாடம் 'தாவரவியலா' அல்லது 'விலங்கியலா' என்பதையும் இணையதள விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பப் பதிவின்போது அந்த வசதி இணையதளத்தில் இல்லாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், இந்தாண்டும் 'கவுன்சிலிங்' போது குழப்பம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்டத் தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: இப்பிரச்னை 1995 முதல் 2,000 பள்ளிகளில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் 40 பள்ளிகளில் 'உயிரியல்' பணியிடம் எனவும்; 19 பள்ளிகளில் 'தாவரவியல்' அல்லது 'விலங்கியல்' பணியிடங்கள் என்றும் உள்ளன. இதனால், உயிரியல் பாடத்தில் காலிப்பணியிடம் ஏற்படும் போது அதில் தாவரவியல் ஆசிரியருக்கு மாறுதல் பெற்றால், அது தாவரவியல் பணியிடமாகவே காண்பிக்கப்பட்டு விலங்கியல் ஆசிரியர் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர் மாறுதல் பெறும்போது உயிரியியல் மற்றும் அவர்களின் முதன்மை பாடத்தில் ஏற்படும் காலிப்பணியிடமும் காண்பிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்

பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் 344 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நேரடி கலந்தாய்வில் 156 பேர் முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான பணி மாறுதல் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு உடனடியாக மாறுதல் ஆணைகளும் வழங்கப்பட்டன.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்கும் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்களில் 7 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஆணைகளும் உடனடியாக வழங்கப்பட்டதாக ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.