Sunday, June 21, 2015

இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது!


இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக ஒற்றைச்சாளர முறையில் ஜூலை 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவ-மாணவிகளின் தரவரிசைப் பட்டியல், மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் நாளை (திங்கள்கிழமை) முதல் அனுப்பப்படும். மேலும், அழைப்புக்கடிதத்தை மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
கலந்தாய்வு நாள், பாடப்பிரிவு விவரம் வருமாறு:
ஜூலை 1 (புதன்) - ஆங்கில மொழியில் படித்த அனைத்து பாடப்பிரிவு மாணவிகள், தெலுங்கு மற்றும் உருது மொழியில் படித்த அனைத்துப் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள், சிறப்புப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்)
ஜூலை 2 (வியாழன்) - தொழிற்பிரிவு மற்றும் கலைப்பிரிவு மாணவிகள்
ஜூலை 3, 4 (வெள்ளி, சனி) - அறிவியல் பிரிவு மாணவிகள்
கலந்தாய்வு தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு, பிளஸ் டூ சான்றிதழ்கள், சாதி சான்று, இருப்பிடச்சான்று, மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர்கள் அதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்

Friday, June 12, 2015

'இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'


'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு: எனது முதல் பிரசவத்திற்காக, கடந்த, 2011ல், 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். எனக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த, 2014, அக்., 12 முதல், 179 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தேன். இதையடுத்து, கடந்த, ஏப்., 10ம் தேதி, பணியில் சேர்ந்தேன்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,'உங்களுக்கு, ஏற்கனவே இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பில் சென்றதை அனுமதிக்க முடியாது' என்றார். இந்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு, முதல் பிரசவத்திலேயே, இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதை காரணமாக வைத்து, அடுத்த பிரசவத் திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்கமுடியாது என்பது ஏற்புடையதல்ல.மகப்பேறு விடுப்பு, பெண்களின் உடல்நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது. முதலில், இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு, விடுப்பு அனுமதிக்க வேண்டும். சம்பளப் பிடித்தம் உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. வரும், 23ம் தேதிக்கு, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஜூலை 1ல் கவுன்சலிங்: ஆசிரியர் பயிற்சி பள்ளி சேர்க்கை


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மொத்தம் 412 இயங்கி வருகின்றன. இவற்றில் 15000 இடங்கள் உள்ளன. இவற்றில் 2300 இடங்கள் அரசு ஆசிரியர் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்த மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்(எஸ்இஆர்டி) முடிவு செய்துள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம் 14ம் தேதி வினியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 4ம் தேதி வரை பெறப்பட்டன. இதுவரை 3350 பேர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்கள் 22ம் தேதி வெளியிட மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஜூலை 1ம் தேதி மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஒற்றைச் சாளர முறையின்(கவுன்சலிங்) கீழ் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்படுவார்கள்.

Thursday, June 11, 2015

கண்ணியமான ஆடைகளை அணிவது அவசியம்: ஆசிரியர்களுக்கு உத்தரவு.


பள்ளி வளாகத்துக்குள், வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் ஏற்ற ஆடைகளை கண்ணியமாக அணிந்துவரவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கல்வியாண்டு துவங்கி வகுப்புகள் நடந்துவரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வித்தர மேம்பாடு குறித்து பல்வேறு உத்தரவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டிய ஆசிரியர்களும், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளி வளாகத்துக்குள் கண்ணியமான ஆடைகளை அணியவேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்க்கவேண்டும்; தலைமையாசிரியர்கள் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று விடுப்பு எடுப்பது அவசியம். விடுப்பில் செல்லும்போது உதவி தலைமை ஆசிரியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும். வேலை நேரத்தில், வகுப்பை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் மொபைல்போன் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தை விதி, 12ல் நடவடிக்கை எடுக்கப்படும். வருகைபதிவேடு உட்பட அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பம் இடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.கோவை மாவட்ட பள்ளிகளில், இதுகுறித்த சுற்றறிக்கை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவுறுத்த உத்தரவிடபட்டுள்ளது.

மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க உத்தரவு


மருத்துவ விடுப்பில் சென்ற ஆசிரியையை உடனடியாகப் பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம், கனக சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த இ.பூங்கோதை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
வேலூர் மாவட்டம், கம்பதம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 1992-ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.
கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 நாள்கள் மருத்துவ விடுப்பில் சென்றேன். பிறகு, அதே ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி பணிக்குத் திரும்பினேன்.
இந்த நிலையில், மீண்டும் உடல் நிலை சரியில்லாததால் அதே ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மீண்டும் மருத்துவ விடுப்பில் சென்றேன். இதற்கு பள்ளி நிர்வாகமும் அனுமதி வழங்கியது.
ஏப்ரல் மாதம் மருத்துவ வாரியம் என்னை ஆய்வு செய்து மருத்துவச் சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து 24-ஆம் தேதி பணியில் சேர சென்றபோது பள்ளி தலைமை ஆசிரியர் என்னை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து வேலூர் மாவட்ட கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தபோது, என்னை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிட்டார். அவ்வாறு உத்தரவிட்டும் பள்ளி நிர்வாகம் என்னை அனுமதிக்கவில்லை.
மருத்துவச் சான்றிதழில் இருந்த கையொப்பம் எனது இல்லை எனக் கூறி என்னை பணியில் அனுமதிக்கவில்லை. எனவே, பணியில் மீண்டும் அனுமதிக்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை எனக்கு ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மனுதாரரை உடனடியாக பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tuesday, June 9, 2015

ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும் பள்ளி கல்வித்துறை உத்தரவு !


ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் போது 5 நாட்களுக்கு மேல்தான் விடுப்பு எடுக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ விடுப்பு எடுத்தால், மருத்துவ குழுவிற்கு அனுப்பப்படும். வருடத்திற்கு 3 மாதம் என கணக்கிட்டு விடுப்பு எடுக்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள் விடுப்பு
எடுக்கும்போது உயர் அலுவலரின் அனுமதி இல்லாமல் எடுக்கக்கூடாது. அவ்வாறு விடுப்பில் செல்லும் போது உதவி ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் அளவைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.
பள்ளி வேலை நேரத்தில் வகுப்பை விட்டு வேறு வகுப்பிற்கோ, வேறு அலுவலகத்திற்கோ செல்லக்கூடாது. உதவி ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பள்ளி நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. மாணவர்களை அடிப்பதோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கக் கூடாது. மேலும் பெண் பிள்ளைகளை தொடுவதோ, கிள்ளுவதோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தெரியவந்தால் நடத்தை விதி 20ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர்விடுப்பு (லோக்கல் ஹாலிடே) தேவைப்படுகிற தலைமையாசிரியர் இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது