Friday, July 24, 2015

ஆசிரியர்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்: பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்


ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சியளித்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டுமென அரசு விரும்புகிறது. ஏனெனில், கல்விக்காக அரசு அதிகமான நிதியை செலவிடுவதால், அதற்கான பலனை எதிர்பார்க்கிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்.
குழந்தைகள் மன ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் வளர்வது பள்ளியில்தான். ஆசிரியர்களின் பேச்சு, நடத்தை, அவர்களின் உடை ஆகியவையை மாணவர்கள் முன்மாதிரியாகக் கருதுகிறார்கள். எனவே, ஆசிரியர்கள் அதற்கேற்றார்போல நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

கலந்தாய்வு கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு வலுக்கிறது வகுப்பை புறக்கணிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு.


கலந்தாய்வு மற்றும் நிர்வாக மாறுதல் நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதம் நடக்கும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, இந்த ஆண்டு இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், புதிய விதிமுறைகள் கொண்ட அரசாணையை அரசு அறிவித்துள்ளது.
இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.ஏமாற்றம்இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:கலந்தாய்வு விதிமுறைகள் ஏமாற்றம் அளிக்கின்றன. வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக இருந்தவர்கள், வள மையம் கலைக்கப்பட்டு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக வெகு தூரத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களும், தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். இவர்ளுக்கு, இந்த கலந்தாய்வில், அருகில் இடம் மாற வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டும் என, அரசின் திடீர் நிபந்தனையால், 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சபிதாவிடம் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நிபந்தனைகளை எதிர்த்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர், நேற்று, மாவட்டத் தலைநகரங்களிலும், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தினர்.
27ம் தேதியும் போராட்டம் நடத்த உள்ளனர்.அச்சம்தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''கலந்தாய்வுக்கு முன், நிர்வாக ரீதியான மாறுதல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் இடமாறுதலில் ஊழல் நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களிடம் கருத்து கேட்காமல், நெறிமுறைகளை மீறி கலந்தாய்வு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.'கலந்தாய்வு நிபந்தனையில் மாற்றம் கொண்டு வராவிட்டால், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்.


'பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது.
இதில், அட்டைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதேபோல் 5 ம் வகுப்பில் எளிமை படைப்பாற்றலும், 6 முதல் 8 ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்விமுறையும் செயல்படுத்தப்பட்டது. இதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து அதற்கு ஏற்ப கற்பிக்க வேண்டும்.'ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகளில் செயல்வழி, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றுவதில்லை' என அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. 'இக்கல்வி முறையை பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்த கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும். அவற்றை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதனால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆய்வுகள் அடிப்படையில் கல்வியாளர்கள் கொண்டு வந்த செயல்வழி, படைப்பாற்றல் முறையை செயல்படுத்த ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இதை முழுமையாக பின்பற்றாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்றார்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் CPS தொகையை செலுத்தாத தமிழக அரசு: தகவல் உரிமை சட்டத்தில் அம்பலம்


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செலுத்தவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
1.1.2004 முதல் மத்திய அரசு வேலையில் சேரும் அனைவருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கட்டாயமானது. கடந்த 1.4.2003 க்கு பிறகு முதல் மாநிலமாக தமிழக அரசும் அறிமுகப்படுத்தியது. 2006 ஜூன் 1 முதல் அரசு ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும்,ரூ.33 ஆயிரத்து 121 கோடி மாநில அரசு ஊழியர்களுக்கான நிதியாக ஓய்வூதியநிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டு உள்ளது. அதே போல் மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய நிதி மற்றும் பணபலனும் கொடுத்துள்ளனர். பிற மாநிலங்களில் மொத்தம் 13 ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 ஆயிரம் பேருக்கு ஓய்வு ஊதிய நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 533 பேர் இறந்தவர்கள். ( ஜூன் 29, 2015 நிலவரப்படி).ஆனால் தமிழகத்தில் ரூ.5,000 கோடி பிடித்தம் செய்தும், இதுவரை ஆணையத்திடம் செலுத்தாமல் உள்ளது. பிடித்தம் செய்ப்பட்ட பணம் என்ன ஆனது என்ற தகவலும் தெரியவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்இதுபற்றியவிபரங்களை திரட்டிய,
திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது; பிறமாநிலங்களெல்லாம் புதிய திட்டத்தில் பிடித்த பணத்தை ஆணையத்திடம் செலுத்திவிட்டன. ஆனால் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. இதுவரை பணியில் இறந்துபோன யாருக்கும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் எதுவும் கொடுக்கவில்லை. திட்டம் துவங்கி 12 ஆண்டுகாகியும் பணம் செலுத்தாதது தற்போது வெளிப்பட்டுள்ளது. இதன்பிறகாவது இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி


தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான 125 பணியிடங்களில் 65-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு, பரமக்குடி ஆகிய இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் உள்பட 65 பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அளவில் மேலும் சில கல்வி அலுவலர்கள் ஓய்வு பெறுகின்றனர். எனவே, கற்றல், கற்பித்தல் மேற்பார்வைப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், 600-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

பள்ளி கல்வித்துறை மீது கலை ஆசிரியர்கள் புகார்.


இடமாறுதல் "கவுன்சிலிங்' உத்தரவில், ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை பழிவாங்குவதாக, கலை ஆசிரியர் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் ராஜ்குமார் அறிக்கை:இடமாறுதல் குறித்த உத்தரவில், இரண்டு ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணிசெய்த ஆசிரியர், பொது மாறுதல் "கவுன்சிலிங்'கில் பங்கேற்கலாம் என்ற விதியை மாற்றி, 2012 முதல், 2015 வரை, ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள் பணி செய்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பணியிடத்துக்கு மாறுதல் கேட்பவர், பணியில் சேர்ந்த பின்பே, அங்கு பணியாற்றி வரும் ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்பது, ஒரே பள்ளியில் நான்கு ஆண்டுகள் வரை பணி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.விருப்பத்தின் அடிப்படையில் பொது மாறுதல் "கவுன்சிலிங்' என்பதை, துறை ரீதியான மாறுதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது; இதனால், வெளிப்படையான பொது மாறுதல் இன்றி, பணியிடங்கள் மறைக்கப்படும் என்ற அச்சமே நிலவுகிறது.மாறுதல் கேட்கும் விண்ணப்பத்தில், மாவட்டம் மட்டுமே குறிப்பிட வேண்டும்; இடம் குறிப்பிட கூடாது என்பதால், ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பழைய நடைமுறையை நீக்கி, குளறுபடியான உத்தரவு வெளியிட்டிருப்பது, பள்ளி கல்வித்துறையின் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Saturday, July 18, 2015

பொது மாறுதல் கலந்தாய்வு 29 தேதி தொடங்குகிறது


ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
அறிவிப்பு வெளியான நாளிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு என அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என்றும், ஜூலை 29 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குநரால் இன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம் வெளியிடப்பட உள்ளது.