Wednesday, November 11, 2015

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.


தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடர, முன் அனுமதி பெறுவது கட்டாயம் என, தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக உயர்கல்வியை தொடர, அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பகுதி நேரமாகவோ, தொலை துார கல்வி மையங்கள் வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, ஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அரசு பணியில் சேரும் பலர் உயர்கல்வியை பகுதி நேரமாகவும், தொலைதுாரக்கல்வி வாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால், துறை அனுமதி இன்றி உயர்கல்வியில் சேர்பவர்கள், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், உயர்கல்வி பயில விரும்பும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறுதல் தொடர்பாகவும், யாரிடம் பெறவேண்டும் என்பது குறித்து குழப்பங்கள் எழுந்ததால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டது. அதன் படி, எம்.பில்., பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள் துறை தலைவரான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று இருப்பது அவசியம். பி.எட்., எம்.எட்., போன்ற படிப்புகளுக்கு, பள்ளி தலைமையாசிரியரிடமே முன் அனுமதி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 4, 2015

தீபாவளி 'புஸ்:' ஆசிரியர்கள் தவிப்பு


ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், தீபாவளி பண்டிகை கொண்டாட முடியுமா என, அவர்கள் கவலைஅடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 20 ஆயிரம் ஆசிரியர்கள், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம், மத்திய அரசின் நிதி உதவியில் இருந்து வழங்கப்படுகிறது.
இந்த ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டு களுக்கான ஊதிய ஆணை வழங்க, தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியது. ஆறு மாதங்களாக இந்த கடிதம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.அதனால், ஒவ்வொரு மாதமும் புதிய அரசாணை பிறப்பித்த பின், ஊதியம் வழங்கப்படும். ஆனால், இந்த மாதம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை.இதை கண்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.