Wednesday, July 16, 2014

இடமாறுதல் 'கவுன்சிலிங்'கில் முறைகேடு: ஆசிரியை கண்ணீர்; கல்வி அலுவலர் ஆஜர்: ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்'கில் முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில், ஆசிரியை மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராகி கண்ணீர் சிந்தினார். மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் ஆஜராகி விளக்கமளித்தார். அவர் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை பீ.பீ.குளம் சங்கீதா தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் இடமாறுதல் 'கவுன்சிலிங்' மூலம், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, 2012 ஜூலை 24 ல் உத்தரவிடப்பட்டது. ஆனால், 2012 ஆக.,22 வரை அப்பள்ளியில் நான் பணியில் சேரவில்லை எனக்கூறி, ஆசிரியை கிரிஜாவை அங்கு கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்தனர். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சென்றேன். அங்கு, 'உங்களுக்கான இடமாறுதல் உத்தரவு சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். உத்தரவு கிடைத்த பின், திருப்பாலை பள்ளிக்குச் செல்லலாம்,' என்றனர். தகவல் உரிமைச் சட்டம் மூலம் விபரம் கோரியபோது, சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலருக்கு, மதுரையிலிருந்து கடிதம் அனுப்பவில்லை, என உறுதியானது. பலமுறை மதுரை முதன்மைக் கல்வி அலுவலரை சந்திக்க முயன்றேன். அவரது நேர்முக உதவியாளரிடம் பேசிய போது,' உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்,' என்றார். இப்பேச்சுக்களை, மொபைல் போனில் பதிவு செய்துள்ளேன். 'கவுன்சிலிங்' முடிவை அதிகாரிகள் மதிக்கவில்லை; நிறைவேற்றவில்லை. தினமும் 4 மணி நேரம் பயணம் செய்து, புழுதிப்பட்டி பள்ளிக்குச் சென்று வருகிறேன். எனது தாய் உடல் ஊனமுற்றவர். குழந்தையை கவனிக்க வேண்டியுள்ளது. ஆஸ்துமா பிரச்னை உள்ளது. 'கவுன்சிலிங்'கில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருப்பாலை பள்ளிக்கு இடமாறுதல் செய்து, பணியாற்ற அனுமதிக்க உத்தர விட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று காலை 11:00 மணிக்கு மனு விசாரணைக்கு வந்தது. வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், மனுதாரரே ஆஜராகி கண்ணீர் மல்க பிரச்னைகளை தெரிவித்தார். நீதிபதி: பெண்கள் அழக்கூடாது. கண்ணகி நீதிகேட்டு போராடியதுபோல், போராட வேண்டும். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகல் 12:00 மணிக்கு ஆஜராக வேண்டும், என்றார். மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆஜராகி விளக்கமளித்தார். நீதிபதி: மனுதாரர் இடமாறுதல் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, முதன்மைக் கல்வி அலுவலர் இன்று (ஜூலை 16) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment