Thursday, September 14, 2017

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது; தமிழக அரசு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.

கேள்விகள்

ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, இழப்பீடு வழங்க வேண்டியது வரும் என்றும், அதற்கு நிவாரணம் கேட்டு, நீதிமன்றத்திற்கு வர முடியாது என்றும் கண்டித்துள்ளது. மேலும், போராட்டம் தொடர்பாக, 12 கேள்விகள் எழுப்பி, அதற்கு விளக்கம் தரவும், அரசுக்கு உத்தரவிட்டது.

அதிக சம்பளம்

இதற்கு பள்ளி கல்வி இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. 33,487 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும். 

43,508 ஆசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டது.

ஒத்திவைப்பு

இதன் பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: உங்களது குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவீர்களா? அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு கோர்ட் எதிரானது அல்ல. போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களின் போராட்டத்தை தான் கவனத்தில் கொள்கிறேன். அரசு ஊழியர்கள் பற்றி நான் கேட்கவில்லை. ஆரம்பத்தில் அரசியல் ரீதியாக இருந்த போராட்டம், சமூக, மதம் மற்றும் மொழிவாரியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை(செப்.,15)க்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment