Wednesday, September 16, 2015

ஊராட்சி பள்ளி ஆசிரியருக்கு கலெக்டர் சுரேஷ்குமார் பாராட்டு


கடலுார்: விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூர் பள்ளி ஆசிரியர் வசந்தனின் பள்ளி வளர்ச்சிப் பணி மற்றும் சமூகப் பணியை பாராட்டி,
கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
விருத்தாசலம் அடுத்த கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை தரணி உட்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் வசந்தன், 33; இப்பள்ளியைத் தனியார் பள்ளியைப் போன்று மாற்றியமைக்க தீர்மானித்து, தனது நண்பர்கள் மற்றும் முகநுால் (Face Book) மூலம், முகம் தெரியாத நண்பர்களின் உதவியை நாடினார்.
அவர்கள் உதவியுடன், கடந்த ஓராண்டில் இப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றம் கண்டுள்ளது. 6 லட்சம் ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ் முறையில் பாடம் நடத்த புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக், டேபிள், சேர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள், சுத்திகரிப்பு சாதனத்துடன் கூடிய குடிநீர் டேங்க் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்து, பாடங்களைக் கற்கின்றனர்.
இவரது பணி குறித்து, கடந்த 11ம் தேதி 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் வசந்தனின் பணியைப் பாராட்டி, கலெக்டர் சுரேஷ்குமார் சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

No comments:

Post a Comment